காவல்துறை போலி அறிக்கை விவகாரம்: அதிகாரிகளிடம் விசாரணை;மனுதார் தேர்வில் தேர்ச்சி! ஐகோர்ட்டு உத்தரவு

காவல்துறையே நீதிமன்றத்தை ஏமாற்றும் சூழலில் போலி அறிக்கை தொடர்பான வழக்கில் சீருடை பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் அனைவரிடமும் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம், கைவிரல் ரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு நடத்திய தேர்வில், போலீஸ்காரர் அருணாச்சலம் என்பவர் கலந்து கொண்டார். இதில், கணிதம் தொடர்பான கேள்விக்கு சரியான பதில் அளித்தும், மதிப்பெண் வழங்கவில்லை என்று கூறி, சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், அந்த கேள்விக்கு எது சரியான பதில் என்பது குறித்து ஐ.ஐ.டி. பேராசிரியரிடம் அறிக்கை பெற உத்தரவிட்டார். இதன்படி, ஐ.ஐ.டி. பேராசிரியர் டி.மூர்த்தி என்பவரிடம் அறிக்கை பெற்றதாக கோர்ட்டில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், அருணாச்சலத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆனால், ஐ.ஐ.டி.யில் மூர்த்தி என்ற பெயரில் பேராசிரியர் யாரும் இல்லை என்றும், அந்த நிபுணர் அறிக்கையே போலியானது என்றும் மனுதாரர் அருணாச்சலம் சார்பில் ஆஜரான வக்கீல் கோர்ட்டில் கூறினார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ‘போலி நிபுணர் அறிக்கையை தாக்கல் செய்ததற்காக, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் டி.ஜி.பி. திரிபாதி மீது தாமாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கை பதிவு செய்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதில், சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் டி.ஜி.பி. திரிபாதி, உறுப்பினர் செயலாளர் ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணன் ஆகியோர் நேரில் ஆஜரானார்கள்.

அப்போது, தேர்வில் கேட்கப்பட்ட கணித கேள்வி தொடர்பாக ஐ.ஐ.டி.யில் பணியாற்றும் பேராசிரியர் ஒருவரிடம் கருத்து கேட்டு அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், ‘இந்த கேள்விக்கு விடை கண்டுபிடிக்க முடியாது என்பதால், தேர்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிப்பெண் வழங்கப்படும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

அதற்கு நீதிபதி, ‘இந்த மோசடி விவகாரத்தில் டி.ஜி.பி., திரிபாதிக்கு நேரடி தொடர்பு இல்லை என்றாலும், தவறு செய்த அதிகாரிகள் மீது அவர் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுபோன்ற மோசடி சம்பவம் எதிர்காலத்தில் நடக்கக்கூடாது. இந்த விவகாரத்தில் மோசடி செய்த போலீஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறினார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

ஐ.ஐ.டி. பேராசிரியரிடம் இருந்து பெறப்பட்ட அறிக்கையில், கணிதம் தொடர்பான கேள்விக்கு சரியான பதில் அளிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. அதனால், தேர்வில் பங்கேற்ற 2,388 பேருக்கும் அரை மதிப்பெண் வழங்கப்படும் என்றும், இதில் மனுதாரர் அருணாச்சலம் உள்பட 9 பேர் இந்த அரை மதிப்பெண் பெற்று தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும், அவர்களது கல்விச்சான்றிதழ் சரிபார்த்த பின்னர், பயிற்சிக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் ஏற்கனவே சீருடை பணியாளர் தேர்வாணையம் தாக்கல் செய்த போலி நிபுணர் அறிக்கையின் அடிப்படையில், அருணாச்சலத்தின் மனுவை கடந்த மாதம் 13-ந் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டேன். அந்த உத்தரவை தற்போது திரும்பப்பெறுகிறேன்.

போலி நிபுணர் அறிக்கை தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த புலன் விசாரணையை மேற்பார்வையிட தகுந்த அதிகாரியை சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நியமிக்க வேண்டும்.

இந்த மோசடி குறித்து, சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் அனைத்து அதிகாரிகளிடமும் தீவிர விசாரணை நடத்தி, அது தொடர்பான அறிக்கையை போலீஸ் கமிஷனர் வருகிற 22-ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில், கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும். இந்த வழக்கை வருகிற 22-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்.இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top