திருச்சியில் தி.க. பிரச்சார கூட்டம்;இந்து முன்னணி கலவரம்;கண்டுகொள்ளாத காவல்துறை

திருச்சி பிரச்சார கூட்டத்தில் கி.வீரமணி பேசிய போது பா.ஜ.க.வினர், இந்து முன்னணியினர் கலவரத்தை ஏற்படுத்தினர்.காவல்துறை வேடிக்கைபார்த்துக்கொண்டிருந்தது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திராவிட கழக தலைவர் கி.வீரமணி இந்துக்கடவுள் கிருஷ்ணர் குறித்து கூறிய கருத்து பா.ஜ.க.வினர், இந்து முன்னணியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் தாராநல்லூர் அருகே நேற்று இரவு திராவிடர் கழகம் சார்பில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து பொதுகூட்டம் நடைபெற்றது.

கூட்டம் தொடங்கியதும் திராவிடர் கழக மாநில பொதுச்செயலாளர் அறிவுக்கரசு பேசிக்கொண்டிருந்தார். அப்போது ராதை -கிருஷ்ணன் குறித்து திராவிடர் கழகத்தலைவர் வீரமணி பேசிய கருத்து குறித்து விளக்கினார்.

அப்போது கூட்டத்தோடு நின்ற இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் அறிவுக்கரசர் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்துக்கடவுள் பற்றி தவறாக பேசுவதை நிறுத்தும்படி கூறினர்.

பதிலுக்கு திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களும் குரல் கொடுத்தனர். இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க. வினரை பார்த்து கண்டித்து பேசினர். கருத்தை கருத்தாக எதிர்கொள்ள பாஜக விற்கு தெரியாததால் இருதரப்புக்கும் இடையே மோதலை உருவாக்கியது.

இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்கள், செருப்பு, நாற்காலிகளை தூக்கி வீசினர். செருப்பு, நாற்காலிகள் மேடை மீது நின்று பேசியவர்கள் மீதும் விழுந்தது.

இதில் தி.க.வைச் சேர்ந்த 2 பேர் காயம் அடைந்தனர். கூட்டத்தில் நின்ற பார்வையாளரும் காயமடைந்தார். அங்கு பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

மக்கள் கொதிப்படைந்ததும் போலீசார் இந்து முன்னணியினர் மற்றும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.அமைப்பைச் சேர்ந்தவர்களை அங்கிருந்து கலைந்து போகச்செய்தனர். அதன் பிறகு கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

இந்த பிரச்சனைக்கு இடையே கூட்டத்திற்கு காரில் வந்த திராவிட கழக தலைவர் கி.வீரமணி மேடை ஏறி பேசி விட்டு மீண்டும் காரில் ஏறி புறப்பட்டு சென்றார். அப்போது மீண்டும் அங்கு வந்த இந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் கி.வீரமணி காரை வழிமறித்து தாக்க முயன்றனர்.

அவரை காரை விட்டு இறக்கவும் முயற்சித்தனர். இதனால் மீண்டும் தி.க.வினருக்கும், இந்து முன்னணி நிர்வாகிகளுக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. போலீசார் விரைந்து வந்து தலையிட்டு கி.வீர மணியை மீட்டு பாதுகாப்பாக காரில் அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காந்தி மார்க்கெட் போலீசில் திராவிட கழகத்தைச் சேர்ந்த அண்ணாநகர் ஆறுமுகம் என்பவர் புகார் செய்தார்.

அதில் போலீஸ் அனுமதி பெற்று தி.க.வினர் நடத்திய கூட்டத்தில் இந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ். பா. ஜனதாவினர் கற்கள் மற்றும் செருப்புகளை வீசி கூட்டத்தை நடத்த விடாமல் ரகளை செய்ததாகவும் இதை தட்டிக் கேட்டபோது அவதூறாக பேசி தனது கழுத்தை நெரித்ததாகவும் கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து காந்தி மார்க்கெட் போலீசர் இந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த 50 பேர் மீது 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். அதே போன்று இது தொடர்பாக இந்து முன்னணி சார்பிலும் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இது தொடர்பாக இந்து முன்னணி மாநகர் மாவட்ட செயலாளர் சுரேஷ் பாபு தி.க.வினர் மீது இந்துக் கடவுள்களை பற்றி அவதூறாக பேசி பொதுமக்கள் மத்தியில் கலவரம் ஏற்படுத்த முயன்றதாகவும் அதை தட்டிக் கேட்டபோது தி.க.வினர் தங்களை அவதூறாக பேசி தாக்குதல் நடத்தியதாகவும் கூறியிருந்தார்.

இதை தொடர்ந்து காந்தி மார்க்கெட் போலீசார் திராவிடர் கழக மாநில பொதுச் செயலாளர் அறிவுக்கரசர், திருச்சி மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ் மற்றும் காட்டூர் சேகர், ஸ்ரீரங்கம் மோகன்தாஸ், செந்தமிழ் இனியன், கனகராஜ், ஆறுமுகம், சுரேஷ், ஆகிய 9 பேர் மீது 9 பிரிவுகளில் வழக்குபதிவு செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும் அந்த பகுதிகளில் அசாம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகின்றனர். வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மக்கள் இயக்கங்களை பயங்கிரவாத இயக்கம் போல சித்தரித்து பேசினார் மற்றும் இளைஞர்கள் தோழர்கள் என்று அழைக்கக்கூடாது தோழர்கள் என்று அழைக்கும் இளைஞர்களை அவர்களது பெற்றோர்கள் கண்டிக்கவேண்டும் என்றும் பேசியவர் என்பது கூடுதல் தகவல்  


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top