ஒருதலைப்பட்சமாக செயல்படும் தேர்தல் ஆணையம்; போராட்டம் நடத்துவோம்: நல்லகண்ணு எச்சரிக்கை

தேர்தல் ஆணையம் ஒருதலைப் பட்சமாக செயல்பட்டால் போராட்டம் நடத்துவோம் என இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு நேற்று கூறினார்

விழுப்புரத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் நாங்கள் சேர்ந்துள்ளோம். தமிழக பிரச்சினைகளையும், மத்திய அரசின் பிற்போக்கையும் முறியடிக்க இணைந்துள்ளோம். மாநில, மத்திய அரசுகள் அதிகாரத்தை பயன்படுத்தி எல்லா திட்டங்களையும் அறிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புயல் தாக்கியபோது வராத மோடி, அமித்ஷா ஆகியோர் இப்போது வருகிறார்கள். தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்; இடைத்தேர்தலில் தோற்று விடக்கூடாது என்பதற்காக மக்களவைத் தேர்தலிலும் வெல்ல எல்லா அதிகாரத்தையும் பயன்படுத்துகிறார்கள். மத்திய, மாநில அரசுகள் இத்தேர்தலை தங்களின் அதிகாரத்துக்குள் கொண்டு வர முனைகிறார்கள்.

வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டிலும், அவரைச் சார்ந்தவர்கள் வீட்டிலும், கனிமொழி போட்டியிடும் தூத்துக்குடி தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணன் வீட்டிலும் சோதனை நடக்கிறது. இதை திட்டமிட்டு நடத்துகிறார்கள். காவல்துறையினர் விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகரிடம் பணம் இருந்ததாக சொல்லி பறிமுதல் செய்துள்ளதாக கூறுகின்றனர். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் மகன் ஒவ்வொருவருக்கும் 500 ரூபாய் கொடுத்துள்ளது செய்தியாக வந்துள்ளது. இதை கண்டுகொள்ளவில்லை.

அதிமுக தன்னை தக்க வைத்துக்கொள்ள பாஜகவுடன் கூட்டணியில் இணைந்துள்ளது. தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டால் தீவிரமான போராட்டத்தை நடத்த வேண்டிஇருக்கும். இத்தேர்தலில் பாஜகவை எதிர்க்கக் காரணம், அது குடியரசு சட்டத்துக்கு எதிராக செயல்படுகிறது. மத பிரிவினையை பாஜக கொண்டு வர முயல்கிறது. தேர்தலை முறையாக நடத்த விரும்பவில்லை. இவ்வாறு நல்லகண்ணு கூறினார்.

அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சரவணன், விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top