இந்தியன் ஓவர்சீஸ்வங்கி பணியாளர் நியமன முறைகேடு: தலைவர் உட்பட 424 பேர் சி.பி.ஐ.கோர்ட்டில் ஆஜர்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர் நியமனத்தில் முறைகேடு. சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் வங்கியின் முன்னாள் தலைவர் உள்பட 424 பேர் சென்னை சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜராகினர்.

கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி துப்புரவு பணியாளர் மற்றும் தபால் பிரிவு ஊழியர் பணிக்கு தமிழகம் முழுவதும் இருந்து 900 பேரை நியமனம் செய்தது.

இந்த பணிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், எஸ்.எஸ்.எல்.சி.யில் தோல்வி அடைந்தவர்களும் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் அதிக கல்வித்தகுதி உடைய பலர் போலியாக கல்வி சான்றிதழ்களை சமர்ப்பித்து பணியில் சேர்ந்ததும், இதற்கு வங்கி அதிகாரிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் உடந்தையாக இருந்ததும் சி.பி.ஐ.க்கு தெரியவந்தது.

இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. விசாரணையில் போலியாக கல்வி சான்றிதழை சமர்ப்பித்து பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் என சுமார் 400 பேர் பணியில் சேர்ந்ததும், பணி நியமனத்துக்காக அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை அதிகாரிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் பணம் பெற்றதும் தெரியவந்தது.

அதேபோன்று, பணியில் சேர்ந்த பலர் உயர்கல்வி முடித்திருப்பது தெரிந்தும் 8-ம் வகுப்பு வரை மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக கூறி அவர்களுக்கு பல்வேறு பள்ளிகளின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் போலியாக சான்றிதழ் வழங்கி இருப்பதும் தெரியவந்தது.

இதைதொடர்ந்து வங்கியின் அப்போதைய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் நரேந்திரா, தொழிற்சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், போலி கல்வி சான்றிதழ் வழங்கிய ஆசிரியர்கள், போலி கல்வி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் என மொத்தம் 446 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

இதைத்தொடர்ந்து போலி கல்வி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்டவர்களில் 4 பேர் இறந்து விட்டனர். இந்தநிலையில் வழக்கின் விசாரணை முடிந்து சென்னை கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சி.பி.ஐ. கோர்ட்டில் மீதமுள்ள 442 பேர் மீது சி.பி.ஐ. சிறப்பு அரசு வக்கீல் எம்.வி.தினகர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.

இதைத்தொடர்ந்து குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக்கொள்வதற்காக வங்கியின் முன்னாள் தலைவர் நரேந்திரா உள்பட 442 பேர் நேரில் ஆஜராக சி.பி.ஐ. கோர்ட்டு சம்மன் அனுப்பியது.

இந்தநிலையில் நேற்று அந்த வழக்கு நீதிபதி ஜவகர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நரேந்திரா உள்பட 424 பேர் கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர். 18 பேர் மட்டும் ஆஜராகவில்லை. இதைத்தொடர்ந்து கோர்ட்டில் ஆஜரானவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

இதன்பின்னர், வழக்கு விசாரணை ஜூன் மாதம் 12-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

ஒரே நேரத்தில் 400-க்கும் மேற்பட்டவர்கள் கோர்ட்டில் குவிந்ததால் கோர்ட்டு வளாகம் பரபரப்பாக இருந்தது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 442 பேருக்கும் வாட்ஸ் அப் மூலம் சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். இதுகுறித்து சி.பி.ஐ. வக்கீல் கூறும்போது, ‘குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஏற்கனவே விசாரணைக்கு ஆஜரான போது அவர்களது செல்போன் எண்கள் பெறப்பட்டன. வாட்ஸ் அப் மூலம் சம்மன் அனுப்புவதை சட்டப்பூர்வமானதாக ஏற்றுக்கொள்ளலாம் என்று ஏற்கனவே டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அந்த அடிப்படையில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் சம்மன் அனுப்பப்பட்டது’ என்று தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top