வருமான வரி சோதனை;திமுக மீது களங்கம் ஏற்படுத்த பாஜக செய்யும் சதி; மு.க.ஸ்டாலின்

வருமான வரி சோதனை மூலமாக திமுக மீது களங்கம் ஏற்படுத்த சதி நடப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், திருப்பூர் மக்களவைத் தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து, தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் திருப்பூரில் நேற்று நடைப் பெற்றது. இதில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

சுப்பராயனுக்கும் கருணாநிதிக்கும் இடையில் மிகுந்த நெருக்கம் உண்டு. உள்நாட்டு பனியன் உற்பத்தியில் 4 சதவீதம் வரியை சுப்பராயன் கேட்டுக்கொண்டதற்காக முற்றிலுமாக ரத்து செய்தார் கருணாநிதி. இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தித் தரவும் தமிழகத்தில் நடைபெறும் மோசமான இந்த ஆட்சிக்கு முடிவு கட்டவும் உங்களது ஆதரவை நீங்கள் எங்களுக்கு வழங்க வேண்டும்.

இந்தியாவில் தேர்தல் ஆணையம் இன்று சுதந்திரமாக உள்ளதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. பிரதமர் மோடி தன்னாட்சி உரிமை பெற்ற அமைப்புகளை மிரட்டுகிறார். மக்களவைத் தேர்தலுடன் தமிழகத்தில் 21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தாமல் 18 தொகுதிகளுக்கு மட்டும் நடத்தப்படுகிறது. நீதிமன்றம் சொல்லியும் தேர்தல் ஆணையம் மீதமுள்ள தொகுதிகளுக்கு தேர்தலை அறிவிக்காமல் இருப்பது ஒரு சதித்திட்டம்.

இடைத் தேர்தல்களில் திமுக வெற்றி பெற்றுவிட்டால் அதிமுக ஆட்சி பறிபோய் விடும் என்பதற்காக நடத்தப்பட்ட சதித்திட்டம்தான் திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு, அவரது அலுவலகம், மகன் நடத்தும் கல்லூரி ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட சோதனை.

இதில், எங்களுக்கு என்ன சந்தேகம் என்றால் வந்த அதிகாரிகளே பணத்தை உள்ளே வைத்து விட்டு, துரைமுருகன் மீது பழி சுமத்தி, திமுக மீது களங்கம் சொல்ல திட்டமிட்ட நாடகம் இது. வேலூர் மக்களவைத் தொகுதி, ஆம்பூர், குடியாத்தம், விளாத்தி குளம் சட்டப்பேரவை இடைத் தேர்தல்களை தடுத்து நிறுத்துவதும் இதன் உள்நோக்கமாக கூறப்படுகிறது. மத்தியில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது கோடநாடு விவகாரம், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து தவறிழைத்தவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்ததுபோல், நிலமற்ற ஏழை விவசாயக் கூலித் தொழிலாளர்கள் கூட்டுறவு உட்பட வங்கிகளில் ஒரு கிராம் முதல் 40 கிராம் வரை வைத்துள்ள நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலத் தலைவர் இரா.முத்தரசன், திமுக துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், திமுக மாநில, மாவட்ட நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top