‘இந்திய ராணுவம் மோடியின் சேனை’ என்று பேசிய உ.பி.முதல்வர் யோகிக்கு கடும் எதிர்ப்பு

இந்திய ராணுவத்தை மோடியின் சேனை என்று உ.பி. முதல்வர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி தேர்தல் கமி‌ஷனிடம் புகார் கொடுக்கப்பட்டது.

உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத் தொகுதியில் முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங் பாரதிய ஜனதா வேட்பாளராக போட்டியிடுகிறார்.

அவரை ஆதரித்து முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பிரசாரம் மேற்கொண்டார்.

காசியாபாத் ராம்லீலா மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் 23 நிமிடம் உரை நிகழ்த்தினார்.

அவர் பேசும் போது, “புல்வாமா தாக்குதலில் நமது இந்திய ராணுவம் சரியான பதிலடியை கொடுத்தது. பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் முகாம் அழிக்கப்பட்டது.

இதுவரை இது போன்ற தாக்குதலை இந்தியா நடத்தியது இல்லை. இந்திய படை என்பது பிரதமர் மோடியின் சேனையாகும். அவர்கள் எதிரிகளுக்கு அதிரடி கொடுத்து இருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியில் பயங்கரவாதிக்கு பதிலடி கொடுத்தார்கள். ஆனால் மோடி அவர்களுக்கு துப்பாக்கி குண்டுகளை கொடுத்துள்ளார்” என்று கூறினார்.

அவர் இந்திய ராணுவத்தை மோடியின் சேனை என்று அழைத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி தேர்தல் கமி‌ஷனிடம் புகார் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து காசியாபாத் மாவட்ட கலெக்டர் இது சம்பந்தமான பத்திரிகை, செய்தி சானல், வீடியோ ஆதாரங்களையும் சேகரித்து அறிக்கை தர வேண்டும் என்று மத்திய தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டு உள்ளது.

மாவட்ட கலெக்டர் அறிக்கை வந்ததும் அதை மாநில தேர்தல் அதிகாரி மத்திய தேர்தல் கமி‌ஷனுக்கு அனுப்பி விட்டார். இதில் தேர்தல் விதி மீறல்கள் இருக்கிறதா? என்பதை தேர்தல் கமி‌ஷன் ஆராய்ந்து முடிவு செய்யும்.

இதற்கிடையே யோகி ஆதித்யநாத்தின் இந்த பேச்சுக்கு இந்திய ராணுவ படை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இது பற்றி அவர்கள் கூறும்போது, “நமது ராணுவம் சுதந்திர காலத்தில் இருந்தே அரசியல் மத சார்புக்கு அப்பாற்பட்டு செயல்படுகிறது. இதனை அரசியலுக்கு பயன்படுத்துவது சரியானது அல்ல” என்று கூறினார்கள்.

கார்கில் போரின் போது தளபதியாக இருந்த வி.பி.மாலிக் கூறும்போது, “கார்கில் போரை கூட தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்த பார்த்தார்கள். அப்போது இதை பிரதமர் வாஜ்பாய் கவனத்துக்கு கொண்டு சென்றேன். அவர் அது போன்ற பிரசாரத்தை தடுத்தார்” என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top