விதிமீறல் செய்த அதிமுக! வேடிக்கை பார்த்தது தமிழக போலீஸ்; வாகன ஊர்வலத்தால் மக்கள் அவதி

மதுரை அதிமுக வேட்பாளர் வேட்புமனுத் தாக்கல் செய்ய ஊர்வலமாகச் சென்றதால் நகரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கட்சியினர் சாலைகளில் வாகனங்களை குறுக்கும், நெடுக்குமாக நிறுத்தியதால் பாதசாரிகள், வாகன ஓட்டுநர்கள் சாலைகளைக் கடந்து செல்ல முடியாமல் வெயிலில் பரிதவித்தனர்.

மதுரை அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன் நேற்று காலை பனகல் சாலையில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய ஊர்வலமாகச் சென்றார். அவருடன் அதிமுக கூட்டணியினர் கார், பைக்குகளில் ஊர்வலமாக வந்தனர். காந்தி அருங்காட்சியகம் சாலை, அண்ணா பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சாலை, தமுக்கம் சாலை உள்ளிட்ட இடங்களில் வாகனங்களை குறுக்கும், நெடுக்குமாக நிறுத்திவிட்டு சென்றனர். இதனால், இச்சாலைகளில் போக்குவரத்து தடைப்பட்டது.

வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றதால் மக்களும், வாகன ஓட்டுநர்களும் இச்சாலைகளை கடந்து செல்ல முடியவில்லை. இதேபோல், அதிமுகவினர் ஊர்வலமாக வந்தபோது பனகல் சாலையிலும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதிமுக வேட்பாளர் வேட்பு மனுத் தாக்கல் செய்தபிறகு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, அண்ணா பேருந்து நிலையம் முன், நான்கு சாலை சந்திப்பில் நின்று பிரச்சாரம் செய்தார். அதனால், அப்பகுதியில் போலீஸாரே போக்குவரத்தை நிறுத்தினர். வேட்புமனு, பிரச்சாரம் முடிந்த பிறகு அதிமுக கூட்டணியினர் கலைந்து நகரின் நாலாபுறமும் வாகனங்களில் ஒரே நேரத்தில் செல்லத் தொடங்கினர்.

இதனால், அனைத்து சாலைகளும் நெரிசலில் தத்தளித்தன. ஆம்புலன்ஸ்கள் கூட செல்ல முடியாமல் நெரிசலில் சிக்கிக் கொண்டன.

ஆளும் கட்சியினர் விதிகளை மீறி சாலைகளில் வாகனங்களை நிறுத்தியபோதும், தேர்தல் விதி முறைகளை மீறி சாலைகளில் பிரச்சாரம் செய்தபோதும் போக்கு வரத்து போலீஸார் கைகட்டி வேடிக்கை பார்த்தனர். பொதுமக்கள் போலீஸாரிடம் கோபப்பட்டபோது, “ஆளும் கட்சியினர் நாங்கள் என்ன செய்ய முடியும்” என்று போலீஸார் பதில் அளித்தது அதிருப்தியை ஏற்படுத்தியது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top