ஜெயலலிதா போலி கைரேகை பற்றி விசாரணை நடத்த வேண்டும் – மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு அறிக்கை

ஜெயலலிதா போலியான கைரேகை பற்றி முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.


மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பு வழங்கியுள்ளது. 

ஏற்கனவே இத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஏ.கே.போஸ் வெற்றிபெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி, எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் சரவணன் வழக்கு தொடுத்திருந்தார். இவரது கோரிக்கையை ஏற்று நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். 


தீர்ப்பில், கட்சி சின்னம் சான்றிதழ் படிவத்தில் கையொப்பம் மட்டுமே ஏற்புடையது என்ற விதிக்கு மாறாக, கைரேகையை ஏற்றுக் கொண்டதன் மூலம் தேர்தல் அதிகாரி தவறு செய்துள்ளார் எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். மேலும் பதிவு செய்யப்பட்டுள்ள கை ரேகையும் உண்மையானதாக இருக்க வாய்ப்பில்லை என்பதோடு ஜெயலலிதா சுயநினைவு இல்லாத நிலையில் எப்படி கைரேகை வைத்திருக்க முடியும். எனவே, கைரேகை போலியானது என்ற அடிப்படையில் ஏ.கே. போஸின் வெற்றியை ரத்து செய்துள்ளார். 

ஒரு முதலமைச்சரின் கைரேகையையே போலியாக பதிவு செய்தது பல கேள்விகளை எழுப்புகிறது. இத்தகைய தில்லுமுல்லு செய்தது யார் என்பதும், தேர்தல் ஆணையம் இதை எப்படி ஏற்றுக்கொண்டது என்பதும் முழுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியதாகும். 

எனவே, தலைமை தேர்தல் ஆணையம் இத்தகைய தில்லுமுல்லுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த காலத்தில் அவரது கையொப்பத்தை போலியாக பயன்படுத்தி அரசு கோப்புகளில் வேறு ஏதும் தில்லுமுல்லுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கக் கூடும் என்ற வலுவான சந்தேகங்களை இத்தீர்ப்பு ஏற்படுத்தியுள்ளதால், இது குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top