தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ந் தேதி; நாடுமுழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது

மக்களவை  தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 18-ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும்.ஏப்ரல் மாதம் 11-ந் தேதி முதல் மே மாதம் 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக இந்தியா முழுவதும் இந்த  தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது.


16-வது  மக்களவையின் பதவி காலம் வருகிற ஜூன் 3-ந் தேதியுடன் முடிவடைகிறது.

இதைத்தொடர்ந்து, 17-வது மக்களவை  தேர்தல் தேதி நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா நேற்று டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மக்களவை  தேர்தல் அட்டவணையை வெளியிட்டார்.

அதன்படி, இந்தியா முழுவதும் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி மே மாதம் 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.


முதல் கட்ட தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 11-ந் தேதி அன்று 20 மாநிலங்களைச் சேர்ந்த 91 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

ஏப்ரல் 18-ந் தேதி நடை பெறும் 2-ம் கட்ட தேர்தலில் 13 மாநிலங்களைச் சேர்ந்த 97 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெறும்.

3-வது கட்ட தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 23-ந் தேதி 14 மாநிலங்களில் உள்ள 115 தொகுதிகளிலும், 4-வது கட்ட தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 29-ந் தேதி 9 மாநிலங்களில் உள்ள 71 தொகுதிகளிலும், 5-வது கட்ட தேர்தல் நடைபெறும் மே 6-ந் தேதி 7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளிலும், 6-வது கட்ட தேர்தல் நடைபெறும் மே 12-ந் தேதி 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நடைபெறும்.

இறுதியில் 7-வது கட்டமாக மே 19-ந் தேதி 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் 2-வது கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

அதாவது, தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் ஏப்ரல் 18-ந் தேதி (வியாழக் கிழமை) ஒரே நாளில் தேர்தல் நடைபெறுகிறது.

அன்றைய தினமே தமிழக சட்டசபையில் காலியாக இருக்கும் 21 சட்டசபை தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும்.


தமிழகம், புதுச்சேரியில் மக்களவை தேர்தல் மற்றும் தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது. மனுதாக்கல் செய்ய 26-ந் தேதி கடைசி நாள். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 27-ந் தேதி நடைபெறும். போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற 29-ந் தேதி கடைசி நாள் ஆகும். அன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். ஓட்டுப்பதிவு ஏப்ரல் 18-ந் தேதி நடைபெறும்.

நாடு முழுவதும் உள்ள 90 கோடி வாக்காளர்கள் பங்கேற்கும் 7 கட்ட தேர்தல் முடிவடைந்ததும், மே மாதம் 23-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

மக்களவை  தேர்தலுக்காக நாடு முழுவதும் 10 லட்சத்து 35 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன. யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் உறுதி செய்து கொள்ள வகை செய்யும் எந்திரம் (வி.வி.பி. ஏ.டி.) இந்த தேர்தலில் எல்லா வாக்குச்சாவடிகளிலும் வைக்கப்படும்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்ததாகவும், சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் அனைத்து அரசியல் விளம்பரங்களுக்கும் முன்கூட்டியே அனுமதி சான்றிதழ் பெற வேண்டும் என்றும் தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா கூறினார்.

ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா அறிவித்து உள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் அட்டவணை

வேட்புமனு தாக்கல் தொடக்கம்     —–  மார்ச் 19-ந் தேதி

மனு தாக்கல் செய்ய கடைசி நாள்—  மார்ச் 26-ந் தேதி

மனுக்கள் மீது பரிசீலனை————-  மார்ச் 27-ந் தேதி

மனுவை வாபஸ் பெற கடைசி நாள்- மார்ச் 29-ந் தேதி

வாக்குப்பதிவு—————————– ஏப்ரல் 18-ந் தேதி

ஓட்டு எண்ணிக்கை——————— மே 23-ந் தேதி


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top