நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் 7 கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடத்த வாய்ப்பு

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 7 கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடத்த வாய்ப்பு உள்ளது.

ஜூன் மாதம் 3-ந் தேதி 543 இடங்களைக் கொண்ட நாடாளுமன்ற மக்களவையின் ஆயுள்காலம் முடிவுக்கு வருகிறது.

அதற்குள் நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடத்தி, முடிவுகள் அறிவித்து 17-வது நாடாளுமன்ற மக்களவை அமைக்கப்பட வேண்டும்.

எனவே தேர்தல் நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் முடுக்கி விட்டுள்ளது.

இன்னொரு பக்கம் தேசிய கட்சிகளும் சரி, மாநில கட்சிகளும் சரி கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு எடுத்து, தொகுதி பங்கீட்டிலும், தொகுதிகளை அடையாளம் காண்பதிலும் மும்முரமாக உள்ளன.

மக்களவை தேர்தலுக்கான தேதியை தேர்தல் கமிஷன் எப்போது அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது. அனைவரின் பார்வையும் தேர்தல் கமிஷன் மீது படிந்துள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதியை தேர்தல் கமிஷன் 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 5-ந் தேதி வெளியிட்டது. அந்த தேர்தல், 9 கட்டங்களாக நடைபெற்றது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தேர்தல், கடந்த முறை ஏப்ரல் 24-ந் தேதி நடந்தது.

இந்த நிலையில் 17-வது மக்களவைக்கான தேர்தல் அறிவிப்பை தலைநகர் டெல்லியில் ஓரிரு நாளில் தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா, தேர்தல் கமிஷனர்கள் அசோக் லாவசா, சுஷில் சந்திரா ஆகியோருடன் நிருபர்களை சந்தித்து வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படலாம் என ஒரு தகவலும், 10 கட்டங்களாக நடத்தப்படலாம் என மற்றொரு தகவலும் கூறுகின்றன.

முதல் கட்ட தேர்தல், தேர்தல் அறிவிக்கை வெளியிட்ட நாளில் இருந்து 3 வாரங்களில் நடத்தப்படும்.

ஓரிரு நாளில் தேர்தல் கமிஷன் தேர்தல் அறிவிப்பை வெளியிடுகிறபோது அதுபற்றிய கெஜட் அறிவிக்கை 10 நாளில் வெளியாகும். அதில் இருந்து 3 வாரங்களில் முதல் கட்ட தேர்தல் நடத்தப்படும். அந்த வகையில் ஏப்ரல் 10-ந் தேதி வாக்கில் முதல் கட்ட தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாட்டில் ஒரே நாளில் அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடத்த வேண்டும் என்பதுதான் அரசியல் கட்சிகளின் ஒரே குரலாக ஒலிக்கிறது. எனவே ஒரே நாளில் தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளுக்கும் நாடாளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

ஒட்டுமொத்த தேர்தலும் மே மாதம் 15-ந் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட்டு விடும். ஓட்டு எண்ணிக்கை மே 20-ந் தேதி நடத்தப்பட்டு, 2 வாரங்களில் புதிய மக்களவை அமைக்கப்பட்டு விடும்.

தேர்தல் அறிவிப்பு வெளியாகிற நாளில் இருந்து உடனடியாக நடத்தை விதிகளும் அமலுக்கு வந்து விடும். எந்தவொரு நலத்திட்டத்தையும், சலுகையையும் தேர்தல் கமிஷனின் முன் அனுமதி பெற்றுத்தான் மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க முடியும். அதே போன்று உயர் அதிகாரிகள் இடமாற்றத்தையும் தேர்தல் கமிஷன் ஒப்புதல் பெற்றே செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் முதல் முறையாக வாக்காளர்கள் யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை உறுதிசெய்துகொள்வதற்காக மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்துடன் ஒப்புகைச்சீட்டு எந்திரமும் இணைக்கப்படுகிறது. நாட்டின் அத்தனை தொகுதிகளிலும் இது நடைமுறைக்கு வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலுடன் காஷ்மீர் மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல் நடத்தப்படவும் வாய்ப்பு இருக்கிறது.

இதே போன்று பதவிக்காலம் முடிய உள்ள சிக்கிம் (மே 27-ந் தேதி), ஆந்திரா (ஜூன் 18-ந் தேதி), ஒடிசா (ஜூன் 11-ந் தேதி), அருணாசலபிரதேசம் (ஜூன் 1-ந் தேதி) ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களும் நாடாளுமன்ற தேர்தலுடன் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top