ஜெய்ஷ் இ முகமது தளங்கள் அழிக்கப்பட்டதாக மத்திய அமைச்சரால் பகிரப்பட்ட போலி புகைப்படங்கள்

இந்திய விமானப்படை சமீபத்தில் பாகிஸ்தானின் பாலகோட் மீது நடத்திய தாக்குதலை அடுத்து, அங்கு ஏற்பட்ட சேதங்கள் என்று குறிப்பிடப்பட்டு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பதிவிட்ட ட்வீட் வைரலானது.

பகிரப்பட்ட காணொளியில், விமானப்படை தாக்குதலுக்கு உள்ளான பகுதி, தாக்குதலுக்கு முன்னும், அதற்கு பின்னும் எப்படி இருந்தது என்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. மேலும், இது பேஸ்புக், ட்விட்டர் மற்றும் யூ டியூபில் இவை ஆயிரக்கணக்கில் பார்க்கப்பட்டு பகிரப்பட்டது.

இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் நடைபெற்ற புல்வாமா தாக்குதலை தொடர்ந்து ஜெய்ஷ் இ முகமதின் பயிற்சி தளங்களை மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.

இந்தியாவின் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது.

ஆனால், அதற்கான ஆதாரம் என்று பகிரப்பட்டு வரும் கானொளி, சில தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளது.

அந்தக் காணொளியில் வரும் முதல் புகைப்படத்தில் இருப்பது, தாக்குதலுக்கு முந்தைய காட்சி என்று கூறப்படுகிறது. அது 2019 பிப்ரவரி 23ஆம் தேதியன்று எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இரண்டாவது புகைப்படம் 2019 பிப்ரவரி 26ஆம் தேதியன்று எடுத்ததாக சொல்லப்படுகிறது. விமானத் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர், எடுக்கப்பட்ட புகைப்படம் என்று கூறப்படும் அதில், இந்திய விமானங்கள் ஏற்படுத்திய சேதத்தை காண்பிக்கிறது.

எனினும், புகைப்படங்களின் உண்மைத்தன்மையை கண்டறியும் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் நாம் பார்த்தபோது, இரண்டாவது புகைப்படம், பல ஆண்டுகளுக்கு முன்னரே இணையத்தில் இருந்தது நமக்கு தெரிய வந்தது.

மைக்ரோசாஃப்ட் பிங் மேப்ஸ் சேவையால் இயங்கும் செயற்கைக்கோள் படத்தளமான “Zoom Earth” என்ற தளத்தில் இருந்து அந்த இரண்டாவது புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளதையும் நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்.

அதன் நிறுவனரான பால் நீவ் பிபிசி செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், விமான தாக்குதலுக்கும், அந்தப் புகைப்படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார்.

“ஆம். இந்த புகைப்படம் கட்டடங்கள் மீது குண்டு வீசப்பட்டதற்கான ஆதாரங்களாக பகிரப்பட்டு வருகிறது. ஆனால், அது உண்மையல்ல. இப்படங்கள் பல ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். அதில் கட்டடம் கட்டப்பட்டு வருவதுதான் காண்பிக்கப்பட்டுள்ளது” என்று மேலும் அவர் தெரிவித்தார்.

நாசா பதிவேற்றும் புகைப்படங்கள் தினமும் மேம்படுத்தப்படும். ஆனால், பிங் மேப்ஸ் புகைப்படங்கள் தினமும் மேம்படுத்தப்படுவதில்லை. அவை பல ஆண்டுகள் பழமையானது.

ட்விட்டரில் பகிரப்படும் கூற்றுகளை பால் நீவ் பொதுவெளியில் மறுத்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவு செய்துள்ள அவர், தங்களின் வலைதளத்தில் செயற்கைக்கோள் படங்களை மேம்படுத்த பல ஆண்டுகள் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top