நிர்மலாதேவிக்கு தாமாக முன் வந்து ஏன் ஜாமீன் வழங்க கூடாது?- உயர் நீதிமன்றம் கேள்வி

அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கப் பொதுச் செயலர் சுகந்தி மதுரை கிளை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் “ஓராண்டுக்கும் மேலாக சிறையில் வைக்கப்பட்டுள்ள நிர்மலாதேவிக்கு நீதிமன்றமே தாமாக முன்வந்து ஏன் ஜாமீன் வழங்கக் கூடாதா” என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய புகாரில் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி ஓராண்டுக்கும் மேலாக ஜாமீன் கிடைக்காமல் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கப் பொதுச் செயலர் சுகந்தி, உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இது பிப். 27-ல் விசாரணைக்கு வந்தபோது, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிர்மலாதேவி வழக்கின் விசாரணைக்கு, இடைக்காலத் தடை விதித்து, விசாரணையை மார்ச் 18-க்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கை முன்கூட்டியே விசாரணைக்கு எடுக்க அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன்படி நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் வீரகதிரவன் மற்றும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முருகன், கருப்பசாமி சார்பில் வழக்கறிஞர் லஜபதிராய் ஆகியோர் வாதிடும்போது, ‘இந்த சம்பவத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேந்தர், வேந்தரின் செயலர் மற்றும் பல்கலைக்கழக புத்தாக்க பயிற்சி இயக்குநர் ஆகியோருக்கும் தொடர்புள்ளது. இவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தவில்லை. முதல் தகவல் அறிக்கையில் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக மட்டும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், எந்த உயர் அதிகாரியிடமும் விசாரிக்கவில்லை என்றனர்.

அப்போது நீதிபதிகள், ‘ஓராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ள நிர்மலா தேவிக்கு நீதிமன்றம் தானாக முன்வந்து ஏன் ஜாமீன் வழங்கக் கூடாது? அவ்வாறு ஜாமீன் வழங்கினால் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளதா?’ எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன், ‘நிர்மலாதேவி உயிருக்கு ஆபத்தில்லை. தனி நீதிபதி உத்தரவின்பேரில்தான் அவருக்குக் கீழமை நீதிமன்றம் தொடர்ந்து ஜாமீன் மறுத்து வருகிறது. நிர்மலாதேவிக்கு ஜாமீன் வழங்க அரசுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை’ என்றார்.

இதையடுத்து, சிபிசிஐடி எஸ்பி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, மார்ச் 11-ம் தேதிக்கு நீதிபதிகள் விசாரணையை தள்ளிவைத்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top