ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி பாலியல் புகார்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஐஜி முருகன் மேல் முறையீடு

பெண் எஸ்பி பாலியல் புகாரில் தனக்கு எதிராக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு ஐஜி மேல்முறையீடு செய்துள்ளார்.

லஞ்ச ஒழிப்புத்துறையில் ஐஜியாக பணியாற்றிய முருகன் தனக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாக அவருக்குக் கீழ் பணியாற்றும் பெண் எஸ்பி ஒருவர் பாலியல் புகார் கொடுத்திருந்தார். இந்த விவகாரம் வெளியானதை அடுத்து இந்தப் புகார் குறித்து விசாரிக்க கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் விசாகா குழுவை அமைத்து டிஜிபி உத்தரவிட்டார்.

புகாரை விசாரித்த விசாகா குழு, ஐஜி முருகன் மீதான புகாரை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த பரிந்துரைத்தது. இதை எதிர்த்து ஐஜி முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது துறையிலேயே விசாகா கமிட்டி உள்ளதாகவும் சிபிசிஐடி விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் கேட்டார்.

இதேபோன்று, ஐஜி முருகனைப் பணிமாற்றம் செய்யக் கோரி புகார் அளித்த பெண் எஸ்பியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகள் தொடர்ச்சியாக நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது.

விசாரணையில் சிபிசிஐடி போலீஸில் சென்று உங்கள் சாட்சியத்தைப் பதிவு செய்யுங்கள் என பெண் எஸ்பிக்கு நீதிபதி அறிவுறுத்தினார். உயர் நீதிமன்ற அறிவுறுத்தலை அடுத்து புகார் அளித்த பெண் எஸ்பி சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி சாட்சியத்தைப் பதிவு செய்தார்.

இதையடுத்து வழக்குகளில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் இந்த வழக்கில் அதிரடியாக அடுக்கடுக்கான உத்தரவுகளை பிறப்பித்தார்.

அதில் ‘‘ ஐஜி முருகனுக்கு எதிரான பாலியல் புகார் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட டிஜிபி லஷ்மி பிரசாத் தலைமையிலான விசாகா கமிட்டி, விசாரணையை முடித்து இரண்டு வார காலத்திற்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.

பெண் எஸ்பி அளித்த புகாரின்பேரில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் சிபிசிஐடி போலீஸார் சட்டப்படி மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 ஐஜி முருகனுக்கு எதிராக பணி விதிகளின் கீழ் தலைமைச்செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டார்.

பாலியல் தொல்லையில் இருந்து பெண் அதிகாரிகள், ஊழியர்களை பாதுகாக்க அனைத்து உயர் அதிகாரிகளின் அலுவலக அறைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தவேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி லஞ்ச ஒழிப்பு துறை ஐ.ஜி. முருகன் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது, அப்போது ஐஜி முருகன் தரப்பில்  “சீமா அகர்வால் தலைமையிலான குழுவே கலைக்கப்பட்ட பிறகு அதன்படி அமைக்கப்பட்ட சிபிசிஐடி விசாரணை செல்லாது என அறிவிக்க வேண்டும், தனி நீதிபதி உத்தரவு நகல் கிடைக்கும் முன்னரே தனது அலுவலகத்தில் விசாகா விசாரணை குழு விசாரணையை தொடங்கியுள்ளது” என தெரிவிக்கப்பட்டது.

 பின்னர் மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டுள்ளதால், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என லஞ்ச ஒழிப்பு துறையின் விசாகா விசாரணை குழு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதையடுத்து தனி நீதிபதி உத்தரவின் மீது நாளை உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கை நாளைக்கு (பிப்.20) ஒத்திவைத்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top