‘அனில் அம்பானி குற்றவாளி, 3 மாதங்கள் சிறை’என – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அனில் அம்பானி, எரிக்ஸன் நிறுவனத்துக்கு 450 கோடி ரூபாயை 4 வாரங்களுக்குள் செலுத்தாவிட்டால் அவருக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது. மேலும் நீதிமன்ற அவமதிப்பு செய்ததால் ஒரு கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நடத்தி வந்த அனில் அம்பானி, நிறுவனம் நஷ்டமானதால் கடனாளியானார். 45,000 கோடி கடன் இருந்த நிலையில், அவரது சகோதரரான முகேஷ் அம்பானி (ஜியோ), ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்சின் அலைவரிசை, கோபுரங்கள் உள்ளிட்டவற்றை 25,000 கோடிக்கு வாங்க முன்வந்தார்.

ஆனால், அதற்கு முன்பு பயன்படுத்திய அலைவரிசை கட்டணம் 2,900 தொலைத்தொடர்பு துறைக்கு செலுத்தப்படவில்லை. தொலைத்தொடர்பு வர்த்தகத்தில் எரிக்ஸன் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்ட ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், அந்த நிறுவனத்துக்கு 1,600 கோடி தர வேண்டி இருந்தது.

நீதிமன்ற மூலம் செட்டில்மென்ட் தீர்வு காணப்பட்டு 550 கோடி பெற்றுக்கொள்ள எரிக்ஸன் சம்மதித்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அந்தத் தொகையை கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அனில் அம்பானி அந்தத் தொகையை வழங்காததால், உச்ச நீதிமன்றத்தை அணுகியது எரிக்ஸன் நிறுவனம்.

நீதிமன்ற உத்தரவுப்படி சட்ட விதிகளை மதிக்கவில்லை என்று எரிக்ஸன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2018-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஆண்டுக்கு 12 சதவீத வட்டியுடன் நிலுவை தொகையை எரிக்ஸன் நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால், குறிப்பிட்ட தேதி கடந்தும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபர் அனில்அம்பானி அந்த தொகையை எரிக்ஸன் நிறுவனத்துக்கு வழங்கவில்லை. இதையடுத்து, எரிக்ஸன் நிறுவனத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது. இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில் ‘‘அனில் அம்பானி நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளது தெளிவாகியுள்ளது. இதனால் அவர் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்கிறது. 118 கோடி ரூபாயை அனில் அம்பானி கருவூலத்தில் செலுத்தியுள்ளார்.

மீதமுள்ள 450 கோடி ரூபாயை அவர் 4 வாரங்களுக்குள் எரிக்ஸன் நிறுவத்துக்கு செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தவில்லை என்றால் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். இதுமட்டுமின்றி உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் அவமதிப்பு ஏற்படுத்தியதற்காக 1 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். இதனை உச்ச நீதிமன்ற கருவூலத்தில் செலுத்த வேண்டும்’’ என நீதிபதிகள் தெரிவித்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top