அமெரிக்க நீதிமன்றத்தில் தமிழர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய அதிமுக; மு.க.ஸ்டாலின் பேச்சு

திருமண விழா ஒன்றில்  தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, தமிழர்களுக்கு அமெரிக்காவில் தலைகுனிவை ஏற்படுத்திய அதிமுக வைப் பற்றி பேசினார்.

கட்டிட அனுமதி, மின் இணைப்பு ஆகியவற்றுக்கு தமிழக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக அமெரிக்கா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதன் மூலம் தமிழர்களுக்கு தலைகுனிவை அ.தி.மு.க. அரசு ஏற்படுத்திவிட்டதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில், அண்ணா அறிவாலய துணை மேலாளர் ஜெயக்குமார் இல்லத் திருமண விழாவில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னையில் உள்ள காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் (சி.டி.எஸ்.) எனும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் கிட்ஸ் கேம்பஸ் கட்டிடம் கட்டுவதற்கும், சிறுசேரியில் கட்டிட அனுமதி, மின்சார இணைப்பு வழங்குதல் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி பெறவும் தமிழக அரசு அதிகாரிகளுக்கு 26 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள ஊழல் வழக்கு, அ.தி.மு.க ஆட்சியில் தமிழகத்திற்கு உலக அரங்கில் அழிக்க முடியாத பெரும் அவமானத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

காக்னிசன்ட் டெக்னாலஜி நிறுவனம் 2.7 மில்லியன் சதுர அடி பரப்பளவில் கட்டிடம் கட்டுவதற்கு, கட்டிட அனுமதி பெறுவதற்காக, அ.தி.மு.க. அரசில் உள்ள அதிகாரிகள் கேட்டுப்பெற்ற இந்த லஞ்சத்திற்கு, அந்நிறுவனத்திற்கு இடையில் நடக்கும் வீடியோ கான்பிரன்ஸ் ஆதாரமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த 26 கோடி ரூபாய் ஊழல் ஆதாரங்களின் அடிப்படையில் சி.டி.எஸ். நிறுவனத்தின் 2 உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஊழல் வழக்கு தொடரப்பட்டு அந்த அதிகாரிகள் மீது கூட்டுச்சதி, ஊழல் மற்றும் பொய்யான ஆதாரங்களை தயாரித்தது போன்ற மிகக் கடுமையானதும் மோசமானதுமான குற்றச்சாட்டுக்கள் அமெரிக்க நீதிமன்றத்தின் முன்பு வைக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கு விசாரணையில், தமிழக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை அந்த தனியார் நிறுவனம் ஒப்புக்கொண்டுவிட்டது. அதனடிப்படையில் சி.டி.எஸ். நிறுவனத்திற்கு 25 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. அரசின் இந்த இமாலய ஊழல் 2012 முதல் 2016-ம் ஆண்டிற்குள் நடைபெற்றதாக வீடியோ கான்பரன்ஸ் ஆதாரங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் ஊழல் செய்வதைத் தடுக்கும் அமெரிக்க சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட இந்த வழக்கு, அ.தி.மு.க ஆட்சியின் கமிஷன், கரெப்ஷன், கலெக்‌ஷன் என்ற ஊழல் ஆட்சியின் முகத்தை தமிழக மக்களுக்கு மட்டுமின்றி, தமிழ்நாட்டிலிருந்து சென்று உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியிலும் வெளிப்படுத்தியிருக்கிறது. இங்குள்ள தமிழர்களுக்கும், அமெரிக்காவில் உள்ள தமிழர்களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்திவிட்டது.

அ.தி.மு.க. ஆட்சியில் அதிகாரிகள் மட்டத்தில் மட்டும் இந்த ஊழல் நடைபெற்றதாக கருத முடியாது. ஏனென்றால், அதிகாரிகளை பணம் வசூலிக்கச் சொல்லி உத்தரவிடுவது அ.தி.மு.க அமைச்சர்கள் தான் என்பது நாடறிந்த உண்மை. ஆகவே, இந்த 26 கோடி ரூபாய் ஊழல் விவகாரத்தில் அந்த 2012 முதல் 2016 வரையிலான காலகட்டங்களில் பதவியில் இருந்த வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை, மின்துறை, சுற்றுப்புறச்சூழல் அமைச்சர்களுக்கு இந்த அமெரிக்கன் டாலரில் நடந்த ஊழலில் நிச்சயம் பெரும்பங்கு உண்டு என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

ஆகவே, தமிழக அரசின் லஞ்ச ஊழல் தடுப்புத் துறை, உடனடியாக ஊழல் வழக்கினைப் பதிவு செய்து, சி.பி.ஐ. மற்றும் இன்டர்போல் உதவியை நாடி, அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் தாமதமின்றிப் பெற வேண்டும். அந்த வழக்கில் தாக்கலாகியுள்ள வீடியோ கான்பரன்ஸ் ஆதாரங்களையும் பெற வேண்டும்.

ஊழல் ஆதாரங்களின் அடிப்படையில் சென்னை மற்றும் சிறுசேரி ஆகிய இடங்களில் சி.டி.எஸ். நிறுவனத்தின் கட்டிட அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் அந்தத் துறை சார்ந்த அமைச்சர்கள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து அனைவருக்கும் சிறைத் தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

வெளிநாடுகளுடன் நல்லுறவை வளர்த்துவிட்டதாக கூறும் மத்தியில் உள்ள பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, இந்த 26 கோடி ரூபாய் ஊழல் ஆதாரங்களையும், அ.தி.மு.க.வை அச்சுறுத்தி கூட்டணிக்கு பணிய வைக்கப் பயன்படுத்திக்கொள்ள எண்ணாமல், நீதி நேர்மையை காப்பாற்றும் நோக்குடன், அமெரிக்க நீதிமன்றத்தில் இருந்து பெற்று தமிழக லஞ்ச தடுப்பு லஞ்ச ஊழல் தடுப்புத் துறைக்கு வழங்குவதற்கு அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top