மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தமிழகத்தின் பாரம்பரியங்களை வெளிப்படுத்துவதில்ஆர்வம் இல்லையா?

தமிழகத்தின் பாரம்பரியங்களை வெளிப்படுத்துவதில் மத்திய அரசு ஆர்வம் இல்லை போல் தெரிகிறது என, உயர் நீதிமன்ற கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்த தொல்லியல்துறைக்கு உத்தரவிடக்கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த காமராஜ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார். இதேபோல் தூத்துக்குடி சிவகளைபரம்பு பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்தக்கோரியும் காமராஜர் தனி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிடுகையில், தமிழகத்தை மத்திய தொல்லியல் துறை புறக்கணிக்கிறது. குஜராத்தில் அகழாய்வு மேற்கொள்ள மத்திய அரசு ரூ.1,000 கோடி ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில் அகழாய்வு பணிக்கு உரிய நிதி ஒதுக்கவில்லை என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ஆதிச்சநல்லூரில் அகழாய்வு முடிந்து 16 ஆண்டுகள் முடிந்தும் இதுவரை அகழாய்வு அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இது தொடர்பாக நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும் அறிக்கை தாக்கல் செய்வதில் மத்திய அரசு ஆர்வமாக இல்லை. தமிழகத்தின் பாரம்பரியத்தை வெளிடுப்படுத்தும் ஒவ்வொரு அகழாய்வுக்கும் நீதிமன்றத்தை அணுக வேண்டியுள்ளது.

ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை சமர்ப்பிக்க பணியிலிருந்து ஓய்வு பெற்ற தொல்லியல் அலுவலர் சத்தியமூர்த்திக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் சத்தியமூர்த்திக்கு மத்திய அரசு எந்த ஒத்துழைப்பும் வழங்கவில்லை. ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால பொருட்கள் வயதை கண்டறியும் சோதனைக்காக புளோரிடாவுக்கு அனுப்பவில்லை. இவற்றை பார்க்கும் போது தமிழகத்தின் பாரம்பரியங்களை வெளிப்படுத்துவதில் மத்திய அரசு ஆர்வம் இல்லாம் இருப்பது போல் தெரிகிறது.

வெளிநாடுகளில் அகழாய்வு நடத்தப்பட்டு பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அதனை அந்த நாடு தூக்கி வைத்து கொண்டாடும். மத்திய தொல்லியல் துறையின் நடவடிக்கையை பார்க்கும் போது தமிழகம் இந்தியாவில் தான் இருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. மத்திய தொல்லியல் துறையின் இந்த நடவடிக்கை கண்டிக்கதக்கது என்றார்.

மத்திய அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், அகழாய்வு மேற்கொள்வதில் மத்திய அரசு பாகுபாடு பார்க்கவில்லை. தொல்லியல் துறை உயர் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு விளக்கம் அளிக்க செய்யப்படும் என்றார்.

இதையடுத்து, விசாரணையை பிப். 18-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top