லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி முருகன் மீது பாலியல் புகார்:கோர்ட் உத்தரவுபடி பெண் எஸ்பி சிபிசிஐடியில் ஆஜர்

லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி முருகனுக்கு எதிராகப் புகார் அளித்த பெண் எஸ்பி சென்னை உயர் நீதிமன்றதில் சாட்சியத்தைப் பதிவு செய்ய உத்தரவிட்டதை அடுத்து சிபிசிஐடி போலீஸார் முன் இன்று ஆஜராகி சாட்சியத்தைப் பதிவு செய்தார்.

லஞ்ச ஒழிப்புத்துறையில் ஐஜியாக பணியாற்றிய முருகன் தனக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாக அவருக்குக் கீழ் பணியாற்றும் பெண் எஸ்பி ஒருவர் பாலியல் புகார் கொடுத்திருந்தார். இந்த விவகாரம் வெளியானதை அடுத்து இந்தப் புகார் குறித்து விசாரிக்க கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் விசாகா குழுவை அமைத்து டிஜிபி உத்தரவிட்டார்.

புகாரை விசாரித்த விசாகா குழு, ஐஜி முருகன் மீதான புகாரை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த பரிந்துரைத்தது. இதை எதிர்த்து ஐஜி முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது துறையிலே விசாகா கமிட்டி உள்ளதாகவும் சிபிசிஐடி விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் கேட்டார்.

இதேபோல், ஐஜி முருகனைப் பணிமாற்றம் செய்யக் கோரி புகார் அளித்த பெண் எஸ்பியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குகளை நேற்று விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ”புகார் அளித்து ஆறு மாதங்களாகியும் பாலியல் வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்காதது  வேதனைக்குரியது. பாதிக்கப்பட்ட பெண் குடும்பம், சமூகப் பிரச்சினைகளைத் தாண்டி புகார் அளிக்க வருவதே அரிது. அதில் இப்படித் தாமதமானால் எப்படி?

மேலும், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி சம்பந்தப்பட்ட காவல் துறையை அணுகத் தடுப்பது எது?” எனக் கேள்வி எழுப்பினார்.

சிபிசிஐடி போலீஸில் சென்று உங்கள் சாட்சியத்தைப் பதிவு செய்யுங்கள் என பெண் எஸ்பிக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

இந்நிலையில் உயர் நீதிமன்ற அறிவுறுத்தலை அடுத்து புகார் அளித்த பெண் எஸ்பி இன்று சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி சாட்சியத்தைப் பதிவு செய்தார். இதையடுத்து நாளை விசாரணைக்கு வரும் வழக்கில் முக்கியத் தீர்ப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top