
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் (சிஏஜி) அறிக்கை நாடாளு மன்றத்தில் இன்று தாக்கல் செய்யப் படுகிறது.
பிரான்ஸின் தஸ்ஸோ நிறுவனத்திடம் இருந்து இந்திய விமானப்படைக்காக 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப் படுகின்றன. ரூ.59,000 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த விவகாரத்தால் நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க் கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவை, மாநிலங்களவையில் இதே விவகாரம் நேற்றும் எதிரொலித்தது. இதனால் மாநிலங்களவை நாள் முழு வதும் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை யில் கடும் அமளி ஏற்பட்டது.
இந்நிலையில் ரஃபேல் போர் ஒப்பந்தம் தொடர்பான மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் (சிஏஜி) அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தற்போதைய சிஏஜி ராஜீவ் மெஹரிஷி இதற்கு முன்பு நிதித்துறை செயலாளராகப் பணியாற்றினார். அப்போதுதான் ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் கையெழுத்தானது. எனவே ரஃபேல் விவகாரத்தில் மத்திய அரசை காப்பாற்ற சிஏஜி முயற்சி செய்து வருகிறார் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை நிறைவடைகிறது. இதற்கு ஒரு நாளைக்கு முன்பாக சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்படுவது குறித்தும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. எனவே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று கடும் அமளி நிலவக்கூடும் என்று அரசியல் வட்டாரம் தெரிவிக்கிறது