சுப்ரீம் கோர்ட்டில் ஸ்டெர்லைட் வழக்கு;வைகோ ஆவேச வாதம்; விசாரணை முடிந்தது – தீர்ப்பு ஒத்திவைப்பு

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், நவீன் சின்கா ஆகியோர் அமர்வில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் மூத்த வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன், கே.வி.விஸ்வநாதன், குரு கிருஷ்ணகுமார் ஆகியோர் தங்கள் விரிவான வாதங்களை ஏற்கனவே முடித்து உள்ளனர்.

இவர்களை தொடர்ந்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தரப்பில் மூத்த வக்கீல் அரிமா சுந்தரம் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்து வருகிறார். நேற்று 5-வது நாளாக நடைபெற்ற விசாரணையில் ஸ்டெர்லைட் தரப்பில் அரிமா சுந்தரம் தனது வாதங்களை தொடர்ந்தார்.

அவர் வாதாடுகையில் கூறியதாவது:-

ஸ்டெர்லைட் ஆலை தாமிரத்தை தயாரிப்பது மட்டுமின்றி சீனா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்கிறது. எங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் உள்நோக்கம் கொண்டவை. ஆலை தரப்பில் தூத்துக்குடியை சுற்றியுள்ள 33 கிராமங்களில் பல்வேறு மருத்துவசேவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆலை தொடர்பாக தேவையற்ற பதற்றத்தை உருவாக்கி வருகிறார்கள்.

ஆலையில் மின்சார இணைப்பை துண்டித்து உள்ளது ஆபத்தை விளைவிக்கும் செயலாகும். தீயணைப்பு சாதனங்கள் மின்இணைப்பில் செயல்படுபவை. அவற்றுக்கு மின்சாரம் வேண்டும். தூத்துக்குடி நகரின் மாசுக்கேடு மற்ற தொழிற்சாலைகளால் அல்ல என்று தமிழக அரசு கூறுவதற்கு எந்த விஞ்ஞான அடிப்படையும் கிடையாது. இவ்வாறு அரிமா சுந்தரம் வாதிட்டார்.

அவரை தொடர்ந்து, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வாதாடுகையில் கூறியதாவது:-

கடந்த 22 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நீதிமன்றங்களிலும், மக்கள் மன்றத்திலும் வன்முறைக்கு துளியும் இடம் கொடுக்காமல் அறவழியில் சுயநலமின்றி போராடி வருகிறேன்.

இங்கே வாதாடிய ஸ்டெர்லைட் வழக்கறிஞர் சுந்தரம் மிகத் தந்திரமாக ஸ்டெர்லைட்டில் பல புகைக் குழாய்கள் உள்ளன என்று சொன்னார். அவை சல்பூரிக் அமிலம், பாஸ்பேரிக் அமிலம் தயாராகும் இடத்தில் உள்ள புகைக் குழாய்கள் ஆகும்.

தாமிரம் உற்பத்தி செய்யும் இடத்தில் ஒரே ஒரு புகைக் குழாய்தான் இருக்கிறது. இந்த புகைக் குழாயில் இருந்து வெளியேறுகிற நச்சுப் புகையில் என்னென்ன உலோகங்கள் எந்த அளவில் உள்ளன என்பதை வேதாந்தா குழுமத்தின் இணையதளத்தில் இருந்தே எடுத்திருக்கிறேன். (அதுபற்றிய விவரங்களை தெரிவித்தார்.

1994-ம் ஆண்டு தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கொடுத்தபோது, ஆலைக்குள் 250 மீட்டர் அகலம் பசுமைச் சுற்று இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. அந்த அகலத்தை குறைக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆலை 1994-ம் ஆண்டு ஆகஸ்டு 11-ந் தேதி தமிழக அரசுக்கு விண்ணப்பித்தது. 7 நாட்களில் அதாவது ஆகஸ்டு 18-ந் தேதி 250 மீட்டரை 25 மீட்டராக தமிழக அரசு குறைத்தது. இதன் மர்மம் என்ன?

‘ஸ்டெர்லைட்’ நிர்வாகம் ஆலையை மூடியதால் நாட்டின் பொருளாதாரத்துக்கே வீழ்ச்சி என்றும், பல கோடி ரூபாய் நஷ்டம் என்றும் அங்கலாய்த்தனர். பொருளாதாரத்தை விட, பண புழக்கத்தை விட மனித உயிர்கள் உன்னதமானவை.

மராட்டிய மாநிலம் ரத்தினகிரி மாவட்டத்தில் அரசு அனுமதி வாங்கி அமைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை ரத்தினகிரி மாவட்ட விவசாயிகள் சம்மட்டிகளோடும், கடப்பாரைகளோடும் வந்து அடித்து நொறுக்கினார்களே! மறுநாள் மராட்டிய மாநில அரசு லைசென்சை ரத்து செய்ததே! ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஏன் மும்பை ஐகோர்ட்டிலோ, டெல்லி சுப்ரீம் கோர்ட்டிலோ மராட்டிய அரசின் நடவடிக்கையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவில்லை?

2013 முதல் 2018-ம் ஆண்டு மே 22-ந் தேதி வரை தமிழ்நாடு அரசும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் ஸ்டெர்லைட் ஆலையின் விதிமீறல்கள் எதையும் கண்டுகொள்ளவில்லை. மாறாக ஆலைக்கு ஆதரவாகவே தொடர்ந்து செயல்பட்டன.

தமிழக மக்கள் இந்த ஆலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். எனவே தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ரத்து செய்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தீர்ப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அதன்பிறகு, தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர், தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த வழக்கை விசாரிப்பது தொடர்பான முகாந்திரம் குறித்த தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.

நேற்றுடன் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததால், நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

வருகிற திங்கட்கிழமையன்று அனைத்து தரப்பினரும் எழுத்துபூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

ஸ்டெர்லைட் ஆலையை  மூடிய உடன் பாஜக வினர் சமூகவலைத்தலங்களில் காப்பர் இல்லாமல் இந்தியாவில் மின்சார கம்பிகள் விலை உயர்ந்து விட்டன என்றும் செம்பாலான பொருட்கள் விலை அதிகரித்து விட்டன என்றும் ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால்தான் இவைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றார்கள். அப்போது பாஜக வினருக்கு எதிராக ‘’ஸ்டெர்லைட் ஆலை தனது காப்பர் உற்பத்தியை பெரும்பாலும் சீனாவிற்கு ஏற்றுமதி பண்ணுகிறது அப்படியிருக்கையில் எப்படி காப்பர் பொருட்கள் விலை உயரும் என்று எதிர்வாதம் வைத்தனர் தூத்துக்குடி மக்கள். .அதை மறுத்து பாஜக வினர் கூச்சலிட்டனர். இப்போது, உண்மை வெளியே தெரிந்து விட்டது அவர்களே சீனாவிற்கு காப்பர் ஏற்றுமதி செய்வதாக சுப்ரீம் கோர்ட்டில் கூறியிருக்கிறார்கள்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top