மத்திய அரசு ஜிஎஸ்டி ரூ.5,454 கோடியை இன்னும் தமிழகத்துக்கு வழங்கவில்லை: ஓபிஎஸ்

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் கடந்த மாதம் (ஜனவரி) 2-ந் தேதி கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து 3-ந் தேதி கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 4-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை நடைபெற்றது. 8-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பதில் உரையுடன் சட்டசபை கூட்டம் முடிவடைந்தது.

இந்த நிலையில், 2019- 2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை (நிதிநிலை அறிக்கை) தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும்  கூடியது.   காலை 10 மணிக்கு நிதித்துறை அமைச்சரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் இதுவாகும்.

மாநிலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி வருவாயில் 2017-18 ஆம் ஆண்டில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 5,454 கோடி ரூபாயை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை என, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

“வறுமை, கல்வியறிவின்மை, வேலையின்மை சுகாதாரம், பாலின சமத்துவம் போன்ற குறியீடுகளில் 100 பிற்படுத்தப்பட்ட வட்டாரங்களில் சிறப்பு கவனம் செலுத்தி சமச்சீரான வளர்ச்சி ஏற்படுவதற்காக மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந் நிதியத்திற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று சிறப்பு பகுதி மேம்பாடு திட்டத்திற்கு 75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, தமிழ்நாடு புதுமை முயற்சிகள் திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

14-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளால் மாநிலங்களுக்கு இடையேயான மத்திய அரசின் நிதிப்பகிர்வில், தமிழ்நாட்டுக்கான பங்கு குறைந்துள்ள போதும் உதய் திட்டத்தையும், ஊதிய உயர்வையும் தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. 2017-18 ஆம் ஆண்டில் 9.07% ஆக இருந்த மாநிலத்தின் சொந்த வரி வருவாயின் வளர்ச்சி, 2018-19 ஆம் ஆண்டில் 14%க்கும் கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரிவருவாயில் ஏற்பட்ட இந்த சாதகமான மாற்றத்தினால், 2018-19 ஆம் ஆண்டு திருத்த மதிப்பீட்டில் கணிக்கப்பட்ட 19,319 கோடி ரூபாயிலிருந்து வருவாய் பற்றாக்குறை 2019-20 ஆம் ஆண்டில் 14,315 கோடி ரூபாயாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரியைச் சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ள நிலையில், அதன் கீழ் கிடைக்கப்பெறும் வரி வருவாயில் குறிப்பிடத்தக்க நிதியை தமிழகம் பெற்றுள்ளது. எனினும், மாநிலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி வருவாயில் 2017-18 ஆம் ஆண்டில் மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய 5,454 கோடி ரூபாய் அளவிலான பங்கையும், ஜிஎஸ்டி வரியில் 455.16 கோடி ரூபாய் அளவிலான உறுதி செய்யப்பட்ட இழப்பீட்டு தொகையும் மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு இதுவரை கிடைக்கப் பெறவில்லை. இந்த நிலுவைத்தொகையை விடுவிப்பதில் மத்திய அரசு செய்யும் தாமதம் மாநிலத்தின் நிதி நிலைமை மீது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், மாநிலத்தின் வருவாய் செலவினங்கள் உயர்ந்து வருவதால், மூலதன செலவினங்களையும், உட்கட்டமைப்பு திட்டங்களையும் அதிக அளவு மேற்கொள்வதற்கு போதுமான நிதி ஆதாரங்கள் இல்லை”.என்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top