வருமானத்துக்கு டாஸ்மாக் கடைகளை அரசு நம்பி இருக்கக்கூடாது – மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள்

 “அரசின் வருமானத்துக்கு டாஸ்மாக் கடைகளை மட்டுமே நம்பி இருக்கக்கூடாது” என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்தனர்.

திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் இளைஞர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது, டாஸ்மாக் கடையில் மது விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும், மதுப்பழக்கத்தால் ஏற்படும் தீங்குகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு பலகை வைக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை மனுவை வழக்காக  மதுரை ஐகோர்ட்டில் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், பள்ளி-கல்லூரி மாணவ- மாணவிகள் மது அருந்து வது போன்ற காட்சிகளை கொண்ட புகைப்படங்கள் ஐகோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது.

மேலும், டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நேரத்தை குறைக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், “இங்கு 24 மணி நேரமும் மது கிடைக்கிறது. அப்படி இருக்கும்போது, மதுக்கடைகளின் நேரத்தை மாற்றி அமைப்பதால் மட்டும் என்ன பயன்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு அரசு வக்கீல் ஆஜராகி, “மது விற்பனையை முறைப்படுத்த பல்வேறு விதிகளும், அரசாணைகளும் பிறப்பிக்கப்பட்டு உள்ளன” என்று தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள் தெரிவித்த கருத்து வருமாறு:-

விதிகள் உள்ளன. ஆனால் அவை முறையாக நடைமுறைப்படுத்தப்படுவது இல்லை. டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதா? சமுதாயத்தில் ஏராளமான பிரச்சினைகளுக்கு மதுதான் காரணம். டாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினால் பெரும்பாலான குற்றங்கள் குறையும்.

அரசின் வருமானத்துக்கு டாஸ்மாக் கடைகளை மட்டுமே நம்பி இருக்கக்கூடாது. வருவாயை பெருக்குவதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. அந்த வழிகளை பின்பற்றுவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். மதுவால் ஒரு தலைமுறையே சீரழிந்துவிட்டது. வருங்கால சந்ததியினரை மதுப்பழக்கத்தில் இருந்து காப்பது அவசியம்.

எனவே கிராமசபை கூட்டங்களை நடத்தி மதுக்கடைகள் வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றலாம்.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

பின்னர் இந்த வழக்கு குறித்து தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 28-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top