சபரிமலை விவகாரம்:பெண்களை அனுமதிக்க தேவஸம் போர்டு ஒப்புதல்; சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு

கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. தீர்ப்பை எதிர்த்து அந்த மாநிலத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இப்படி ஒரு வழக்கை போட்டதே பாஜக வினர்தான்.ஆனால் தீர்ப்பு வந்ததும் தேர்தல் அரசியல் காரணங்களுக்காக ஒன்றும் தெரியாத அப்பாவி மக்களை திரட்டி போராட்டம் செய்கின்றனர்.அவர்களது நோக்கமே பாஜக ஆளாத மாநிலங்களில் ஒரு கலவரத்தை ஏற்படுத்தி அதன் மூலம் தனக்கான ஆட்களை சேர்ப்பதுதான்.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி சந்திரசூட் ,நீதிபதி எ.எம்.கன்வில்கர், ரோகிண்டன் பாலி நாரிமன்,இந்து மல்கோத்ரா என  ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு பெண்களை [10-50 வயது] சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்கலாம் என தெரிவித்தது இதில் பெண் நீதிபதியான இந்து மல்கோத்திரா மட்டும்  பெண்களுக்கு எதிராக, பெண்கள் கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது என்றார்.

அதிலும் குறிப்பாக நீதிபதி சந்திரசூட் மிகத்தெளிவாக பெண்களை அவர்களது இயற்கைச்செயலான மாத விடாயை காரணம் காட்டி கோவிலுக்குள் அனுமதிக்க மறுப்பது இந்திய அரசியல் சாசனம் பிரிவு 17 க்கு[ தீண்டாமை ஒழிப்பு ] எதிரானது.இது தண்டனைக்குரிய குற்றம்.என்றும், சமூக ஒழுங்கு மற்றும் அறநெறியை கடைபிடிக்க சட்டம்  வலியுறுத்துவது போல, அரசியலமைப்பு சட்டத்திற்கும் அறம் உண்டு.ஆகையால் பெண்களை மாதவிடாயின் அடிப்படையில் பிரித்து கோவிலுக்குள் அனுமதிக்க மறுப்பது ஒரு தீண்டாமையே! அது அரசியலமைப்பு சட்ட அறத்திற்கு[ constitutional morality] எதிரானது என்றார்.   

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்யமாட்டோம் என்றும், தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்து உள்ளார். இதேபோல் சபரிமலை அய்யப்பன் கோவிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டும் மறுஆய்வு மனு தாக்கல் செய்வது இல்லை என்று தீர்மானித்து உள்ளது.

இந்த நிலையில், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட அனுமதி வழங்கி பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து தேசிய அய்யப்ப பக்தர்கள் சார்பில் அந்த அமைப்பின் தலைவர் ஷைலஜா மறுஆய்வு மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார்.

இதுபோல் மொத்தம் 48 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த மனுக்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாகவும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராகவும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

இந்த சீராய்வு மனுக்கள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் நரிமன், கான்வில்கர், சந்திரச்சூட் மற்றும் பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா ஆகியோரை உள்ளடக்கிய அமைப்பால் விசாரணை செய்யப்படுகிறது.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு ஆதரவாக தங்களையும் ஒரு மனுதாரராக  சேர்த்து கொள்ளுமாறு நான்கு பெண்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளனர். கேரளாவை சேர்ந்த  ரேஷ்மா, ஷானிலா, பிந்து மற்றும் கனக துர்கா இந்த மனுக்களை தாக்கல் செய்து உள்ளனர்.

ரேஷ்மா, ஷானிலா  இருவரும் இரண்டு முறை கோவிலுக்குள் நுழைய முயன்றவர்கள். பிந்து, கனகதுர்கா இருவரும் முதல்முறையாக கோவிலுக்குள் சென்று வந்தவர்கள் ஆவார்கள்.

சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு உட்பட பல்வேறு தரப்பு தாக்கல் செய்த சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை இன்று தொடங்கியது.

சபரிமலையில் பெண்களை அனுமதித்த தீர்ப்பு எதிராக பராசரன் வாதாடினார். மத நம்பிக்கை காரணமாகவே சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி  மறுக்கப்படுகிறது, தீண்டாமை காரணமல்ல. கோவிலுக்கான மரபை பின்பற்றி யார் வேண்டுமானாலும் வரலாம். கோவில் மரபு அடைப்படையில் தான் குறிப்பிட்ட வயது பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. மத நம்பிக்கை,  கோட்பாடுகளில் நீதிமன்றங்கள் தலையிட்டது இல்லை. அருவருக்கதக்க  கோவில் மரபு இருந்தால் மட்டுமே நீதிமன்றங்கள் தலையிட்டு உள்ளன.  சபரிமலையில் குறிப்பிட்ட வயது பெண்களை அனுமதிப்பது இல்லை என்பது நீண்டகால மரபு என வாதாடினார்.

10 முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது, வெறும் தீண்டாமை விஷயத்தை மட்டும் கருத்தில் கொண்டல்ல. அலசி ஆராய்ந்து தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என சுப்ரீம் கோர்ட் நீதிபதி நரிமன் கூறினார்.

கேரள அரசு சார்பில் வாதிடும்போது,  அரசியலமைப்பை குலைக்கும் எதுவானாலும் அதை அனுமதிக்க முடியாது. அரசியல்சாசனத்திற்கு எதிராக ஏதாவது மத நம்பிக்கை கடைபிடிக்கப்படுகிறது என்றால் அதில் நிச்சயம் நீதிமன்றம் தலையிடலாம் என வாதிடப்பட்டது.

சுவாமி ஐயப்பனின் நைசிக பிரமச்சாரிய தன்மையைக் குறிப்பிட்டு மாதவிடாய் வயதுடைய பெண்களை அனுமதிக்க முடியாது என்று தீவிரமாக அன்று வாதிட்ட தேவஸம் போர்டு புதன்கிழமையன்று உச்ச நீதிமன்றத்தில் தன் முடிவில் அந்தர்பல்ட்டி அடித்து அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்து ஆச்சரியமேற்படுத்தியது

திருவிதாங்கூர் தேவஸ்தானத்தில் மாநில அரசு உறுப்பினர்களும் உள்ளனர். இன்று இவர்கள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வின் முன்பு  ‘உயிரியல் ரீதியான குணாம்சங்களுக்காக’ ஒரு குறிப்பிட்ட வகையினரை அனுமதிக்காமல் பாகுபாடு காட்ட முடியாது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து திடீர் யு-டர்ன் அடித்துள்ளது.

அமர்வின் முந்தைய நண்பகல் அமர்வில் செப்.28, 2018-ன் உச்ச நீதிமன்றத் தீர்ப்புடன் மாநில அரசு உடன்படுவதாகவும், இதனால் தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியது.

இந்நிலையில் தேவஸம் போர்டு,  “சட்டப்பிரிவு 25(1), அனைத்துப் பிரிவினரும் மத உணர்வுகளைக் கடைபிடிக்க சமத்துவத்தை வலியுறுத்துகிறது” என்று போர்டை பிரதிநிதித்துவம் செய்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி அமர்வின் முன்னிலையில் தெரிவித்தார்.

.

இந்நிலையில் திடீர் யு-டர்ன் அடித்த தேவஸம் போர்டு, “உயிரியல் ரீதியான பண்புகளைக் காரணம் காட்டி வாழ்க்கையின் எந்த ஒரு புலத்திலும் பெண்களை ஒதுக்க முடியாது நம் அரசியல் அமைப்பின் முக்கியமான அங்கம் சமத்துவம் ஆகும்” என்றது.

இன்று விவாதங்கள் முடிவடைந்த நிலையில் சீராய்வு செய்யக்கோரும் மனுக்கள் மீதான விசாரனையை  உச்ச நீதிமன்ற அமர்வு ஒத்தி வைத்தது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top