மக்கள்விரோத பாஜகவுக்கு எதிராக கொல்கத்தாவில் பிரமாண்ட மாநாடு: 22 எதிர்க்கட்சி தலைவர்கள் திரண்டனர்

14 எதிர்க்கட்சிகளை சேர்ந்த 22 தலைவர்கள் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற பிரமாண்ட மாநாட்டில், பாரதீய ஜனதாவுக்கு எதிராக திரண்டனர்.


மக்கள் விரோத திட்டங்களை கொண்டுவரும் பாரதீய ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சிகள் தீவிர முயற்சி செய்து வருகின்றன. இது தொடர்பாக எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் அவ்வப்போது சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து இருக்கின்றன.

.எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்றும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பிரதமர் யார் என்பதை முடிவு செய்து கொள்ளலாம் என்றும் இந்த கூட்டணி  கூறுகிறது.இது மக்களை மிகவும் ஈர்த்து உள்ளதாக சமூகவளைத்தலங்களில் பேசிக்கொள்கிறார்கள்

இந்த நிலையில், எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியாக, மம்தா பானர்ஜி நேற்று கொல்கத்தா நகரில் எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்து இருந்தார்.

பிரமாண்டமாக நடைபெற்ற இந்த மாநாட்டில் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்-மந்திரியும் தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால், கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி, மதசார்பற்ற ஜனதாதள தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவேகவுடா, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாடு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, லோக் தந்திரிக் ஜனதாதள தலைவர் சரத் யாதவ் உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகளை சேர்ந்த 22 தலைவர்கள் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே, அபிஷேக் சிங்வி ஆகியோர் பங்கு கொண்டனர்.

லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சியின் சார்பில் தேஜஸ்வி யாதவ், பகுஜன் சமாஜ் சார்பில் பொதுச் செயலாளர் சதீஷ் சந்திர மிஸ்ரா மற்றும் ஹேமந்த் சோரன் (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா), அருணாசல பிரதேச முன்னாள் முதல்-மந்திரி கெகாங் அபாங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முன்னாள் மத்திய மந்திரிகளான பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த யஷ்வந்த் சின்கா, அருண்ஷோரி, சத்ருகன் சின்கா எம்.பி. ஆகியோரும் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் பேசிய தலைவர்கள், மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக தாக்கினார்கள். மோடி ஆட்சியில், மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருவதாகவும், நாட்டில் ஒற்றுமை சீர்குலைந்து விட்டதாகவும், நாடு முன்னேற்றம் காணவில்லை என்றும் குறை கூறினார்கள்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது என்றும், வேலைவாய்ப்பை பெருக்கவில்லை என்றும், எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலில் இந்த அரசை மக்கள் வீழ்த்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பேசுகையில், இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் என்று குறிப்பிட்டதோடு, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். மோடியை விளம்பரப்பிரியர் என்றும், செயல்படாத பிரதமர் என்றும் வர்ணித்த அவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சி தேக்க நிலையை அடைந்து விட்டதாகவும் கூறினார். பாரதீய ஜனதா நாட்டை பிளவுபடுத்துவதாக குற்றம் சாட்டிய சந்திரபாபு நாயுடு, இந்தியாவையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதுதான் நமது லட்சியம் என்றும் கூறினார்.

கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு நடத்திய மாநாட்டில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர் தனது பேச்சை தொடங்கும்போது, வங்காள மொழியில், ‘பாங்காளேர் பாகி தேர்! தமிழ்நாடூர் ஸ்டாலினேர், ப்ரேம் போரா நமோஷ்கார்(வங்கத்துப் புலிகளே, உங்களுக்கு தமிழ்நாட்டு ஸ்டாலினின் அன்பு வணக்கங்கள்)’ என்று பேசினார். தொடர்ந்து தனது வருகைக்கான காரணத்தையும் வங்காள மொழியில் அவர் குறிப்பிட்டார்.

‘பல நூறு மைல்கள் தாண்டி உங்களைக் காண வந்திருக்கிறேன். தூரமாக நாம் இருந்தாலும் ஒரே நேர்கோட்டில் தான் இருக்கிறோம். கொல்கத்தா-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை நம்மை இணைத்திருக்கிறது. இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டத்துக்காக வங்கத்து தங்கை இரும்புப்பெண்மணி, எளிமையான மனிதர் மம்தா பானர்ஜியின் அழைப்பை ஏற்று நான் வந்திருக்கிறேன் என்று குறிப்பிட்டு அசத்தினார். பின்னர் தனது முழு உரையை தாய்மொழியான தமிழில் பேசினார். அவரது உரை மொழி பெயர்த்து கூறப்பட்டது.கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி பேசுகையில், கர்நாடகத்தில் பாரதீய ஜனதா கட்சி, எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் குதிரை பேர முயற்சியில் ஈடுபட்டு தனது அரசை கவிழ்க்க முயன்றதாக குற்றம்சாட்டினார். மாநில கட்சிகள் மக்களுடன் நெருக்கமாக தொடர்பு வைத்திருப்பதாகவும், அவர்களுடைய நலனை பாதுகாத்து வருவதாகவும் குமாரசாமி கூறினார்.

முன்னாள் பிரதமர் தேவேகவுடா பேசுகையில், கட்சி தலைவர்கள் தங்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளை மறந்து ஓரணியில் திரண்டு ஒற்றுமையுடன் தேர்தலை சந்திக்க வேண்டும் என்றும், பல்வேறு மாநிலங்களிலும் தொகுதி பங்கீடு சவாலான பணி என்றும், அதை வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும் என்றும் கூறினார்.

பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மல்லிகார்ஜூன கார்கே பேசத் தொடங்கும் முன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்து இருப்பதாக கூறியதோடு, எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டியதற்காக மம்தா பானர்ஜிக்கு நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில், மோடி அரசின் ஆணவப்போக்கை கண்டித்து போராடுவதற்காக எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்றாக திரண்டு இருப்பதாகவும், நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் நாட்டில் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான தேர்தல் என்றும் கூறினார். பணமதிப்பு இழப்பு நடவடிக்கையில் பாரதீய ஜனதா அரசு தோல்வி அடைந்து விட்டதாகவும், ரபேல் போர் விமான ஒப்பந்தம் மோசடியானது என்றும் அவர் தனது பேச்சின் போது குறிப்பிட்டார்.

அபிஷேக் மனு சிங்வி பேசுகையில், நாட்டை கருமேகங்கள் சூழ்ந்து இருப்பதாகவும், அதை அகற்றுவதற்காக வானவில் போல் 22 கட்சி தலைவர்கள் ஓரணியில் திரண்டு இருப்பதாகவும் கூறினார். ஓட்டுகள் சிதறினால் பயன் அடையப்போவது பாரதீய ஜனதாதான் என்றும், எனவே எதிர்க் கட்சிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், மோடியும் அமித்ஷாவும் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால் நாட்டை துண்டாடிவிடுவார்கள் என்றும், அரசியல் சாசனத்தையே மாற்றி தேர்தல்கள் நடைபெறுவதை ரத்து செய்து விடுவார்கள் என்றும், எனவே அவர்களை அப்புறப்படுத்த வேண்டியது கட்டாயம் என்றும் கூறினார்.

“பிரதமர் பதவிக்காக நாம் சண்டையிட்டுக் கொள்வதாக பாரதீய ஜனதா தலைவர்கள் கூறுகிறார்கள். ஆனால் அது உண்மை அல்ல. இந்த தேசத்தையும், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளின் நலன்களையும் பாதுகாப்பதற்காக நாம் இங்கு ஒன்றாக கூடி இருக்கிறோம்” என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தனது பேச்சின் போது குறிப்பிட்டார். பாரதீய ஜனதா ஆட்சியில் விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பரூக் அப்துல்லா பேசுகையில், மதத்தின் பெயரால் மக்களை பாரதீய ஜனதா பிளவுபடுத்துவதாகவும், எனவே எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு பிரிவினைவாத சக்திகளை தோற்கடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அகிலேஷ் யாதவ் பேசுகையில், இந்த ஆண்டில் மத்தியில் புதிய பிரதமர் வருவார் என்றார்.

யஷ்வந்த் சின்கா பேசுகையில், பாரதீய ஜனதா ஆட்சியில் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாகவும், அதை காப்பாற்றுவதற்காக எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்றாக திரண்டு இருப்பதாகவும் கூறினார்.

அருண் ஷோரி பேசுகையில், பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை குறை கூறியதோடு, சரக்கு, சேவை வரி மோசமான முறையில் அமல்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

சத்ருகன் சின்கா பேசுகையில், அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருப்பதாகவும், நாட்டுக்கு புதிய தலைவர் தேவைப்படுவதாகவும் கூறினார்.

மாநாட்டில் மேற்கு வங்காளம் மாநிலம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக் கான திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தலைவர்களின் பேச்சை கேட்பதற்காக மைதானத்தில் 30 எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு இருந்தன.

இந்த மாநாட்டில் இடதுசாரி கட்சிகள் மற்றும் அ.தி.மு.க., தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி, நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதாதளம், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கலந்து கொள்ளவில்லை.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top