இணையத்தில் பதிவிறக்கம் செய்யப்படும் தீர்ப்பு நகலை அதிகாரிகள் ஏற்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

‘உயர் நீதிமன்ற தீர்ப்புகள்’ இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டாலும் அது ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி, ‘தீர்ப்பு நகலை ஏற்கலாம்’ என அரசு அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட விவசாயி ஒருவர், தன்னுடைய விளை நிலத்துக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட மின்இணைப்பை அதிகாரிகள் துண்டித்து விட்டதாகவும், மீண்டும் இணைப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரி உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது மனுதாரருக்கு மின்இணைப்பு வழங்கப் பட்டுவிட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டது.

அதையடுத்து நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மின் இணைப்பு வழங்கப்பட்டுவிட்டதாக அரசு தரப்பில் கூறப்படுவதால் வழக்கை முடித்து வைக்கிறேன். உயர் நீதி மன்றம் வழக்குகளை விரைவாக முடித்து தீர்ப்பு வழங்கினாலும், தீர்ப்பின் சான்றளிக்கப்பட்ட நகலைப் பெறுவதற்கு பதிவுத்துறையுடன் போராட வேண்டியிருப் பதாகவும், இதற்கு நீண்ட காலதாமதம் ஏற்படுவதாகவும் வழக்கறிஞர்கள் அவ்வப்போது முறையிட்டு வருகின்றனர்.

அவசர வழக்குகளின் தீர்ப்புகளை உடனுக்குடன் பெற முடியாமல் அந்த உத்தரவையே அமல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுவிடுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. அதேநேரம், உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் தேக்கம் மற்றும் பிறப்பிக்கப்படும் தீர்ப்புகளின் நகல்களை உடனுக்குடன் வழங்குவது என்பதும் சாத்தியமில்லாத ஒன்று. நீண்டகாலமாக தொடரும் இந்தப் பிரச்சினைக்கு மாற்றுத்தீர்வு காண வேண்டிய அவசியம் உள்ளது.

ஒரு வழக்கில் தீர்ப்பை பிறப்பிக்கும் நீதிபதி அந்தத் தீர்ப்பில் கையெழுத் திட்டுவிட்டால், உடனடியாக அதை உயர் நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இந்தத் தீர்ப்பு நகலை இணையத் தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அதில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் கையெழுத்திட்டு, தனது பெயர் மற்றும் பதிவு எண்ணைக் குறிப்பிட்டு வழங்கினால் அந்தத் தீர்ப்பு நகலை அரசு அதிகாரிகள் ஏற்று அமல்படுத்தலாம்.

இந்தத் தீர்ப்பு நகலை ஏற்க மறுக்கும் அதிகாரிகள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரலாம். இதுதொடர்பாக அனைத்து துறைச் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோருக்கு தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும். அதேபோல இது குறித்து மாவட்ட முதன்மை அமர்வு முதல் குற்றவியல் நடுவர்களுக்கும் உயர் நீதிமன்ற பதிவுத்துறை தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் நீதிபதி கூறி யுள்ளார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top