கொடநாடு கொலை விவகாரம்; எடப்பாடி பழனிசாமி தொடர்பு; டெல்லி கைதான சயன், மனோஜ் விடுவிப்பு

கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இதனை தடுக்க முயன்ற வீட்டு காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை-கொள்ளை வழக்கில் கேரளாவை சேர்ந்த கூலிப்படை தலைவன் ஷயான், மனோஜ் உள்பட கூட்டாளிகள் 10 பேர் கைது செய்யப்பட்டனர். ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ், ஷயானின் மனைவி மற்றும் குழந்தை வெவ்வேறு சாலை விபத்துகளில் சிக்கி பலியாகினர்.

கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றிய கம்ப்யூட்டர் ஆபரேட்டரும் உயிர் இழந்தார். அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த தொடர் மரணங்கள் பெரும் சந்தேகங்களை கிளப்பின.

தற்போது கொடநாடு விவகாரம் குறித்த வழக்கு நீலகிரி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கைதான கூலிப்படை தலைவன் ஷயான், அவனது கூட்டாளி மனோஜ் ஆகியோர் ஜாமீனில் வெளியே வந்தனர்.

இந்த நிலையில் கொடநாடு விவகாரம் தொடர்பாக ஷயான், மனோஜ் மற்றும் ‘தெகல்கா’ இணையதள புலனாய்வு பத்திரிகை முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஆகியோர் இணைந்து கடந்த 11-ந் தேதி டெல்லியில் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டனர். அதில் தற்போது தமிழக முதல்-அமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி சொல்லித்தான் இவை அனைத்தையும் செய்தோம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புபடுத்தி குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

தன் மீது இது போன்ற குற்றச்சாட்டுக்கள் பல வந்தும் அமைதிகாத்த எடப்பாடி அவர்கள், இந்த குற்றச்சாட்டுக்கு உடனடியாக எதிர்வினை புரிந்தது அரசியல் வட்டாரத்தில் எல்லோரையும் வியக்க வைத்தது. தன் மீதான குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு மாறானது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தது மட்டுமல்ல தன்னை காத்துக்கொள்ள டெல்லியில் இதற்கான வேலையை செய்ய ஆரம்பித்தார்.

அ.தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மீது அவதூறு தகவல் பரப்பியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு ‘சைபர் க்ரைம்’ போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் ஷயான், மனோஜ் மற்றும் மேத்யூஸ் சாமுவேல் ஆகியோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த 3 பேரையும் கைது செய்வதற்காக மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை போலீசார் கடந்த 12-ந் தேதி டெல்லி சென்றனர். அங்கு முகாமிட்டு, ஷயான், மனோஜ் ஆகியோரை நேற்று முன்தினம் மாலை கைது செய்தனர்.

மேத்யூஸ் சாமுவேல் மட்டும் போலீசார் பிடியில் சிக்கவில்லை. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஷயான், மனோஜ் ஆகியோர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று அதிகாலை 4.50 மணியளவில் சென்னை கொண்டுவரப்பட்டனர்.

பின்னர் 2 பேரும் விசாரணைக்காக சென்னை எழும்பூரில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களிடம் காலை 5.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விசாரணை நடந்தது.

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் குறித்து பல முறை விசாரணை நடந்த போது எதுவும் சொல்லாமல் தற்போது புதிதாக குற்றச்சாட்டு கூறுவது ஏன்? இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின்னர் முதல்-அமைச்சரை தொடர்புபடுத்தியது ஏன்? இதன் பின்னணியில் யார்-யார் இருக்கிறார்கள்? ‘தெகல்கா’ முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் தொடர்பு கிடைத்தது எப்படி? போன்ற பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகளை போலீசார் முன் வைத்தனர். அப்போது அவர்கள் அளித்த வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்தனர்.

இந்த விசாரணை நடைபெற்ற சமயத்தில் போலீசாரை தவிர வேறு யாரும் மத்திய குற்றப்பிரிவு வளாகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. பத்திரிகையாளர்களும் நுழைவுவாயில் முன்பு தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் 12 மணி நேரம் விசாரணைக்கு பின்னர் 2 பேரும் எழும்பூர் கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு சரிதா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது கோடநாடு விவகாரம் தொடர்பான ஆவணப்படத்தை மாஜிஸ்திரேட்டு சரிதா பார்வையிட்டார்.

2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட நேரத்தில் எழும்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு வளாகத்திலும் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோர்ட்டின் அனைத்து நுழைவுவாயில்களும் மூடப்பட்டு, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அவர்களை சிறையில் அடைப்பது தொடர்பான விவாதம், இரவில் நீண்ட நேரம் நடைபெற்றது எழும்பூர் நீதிமன்றத்தில் சயன், மனோஜை ஆஜர்படுத்திய போலீசிடம் நீதிபதி சரமாரி கேள்வி கேள்விகள் கேட்டார். போலீசிடம் அதற்கு பதில் இல்லை,சட்டத்திற்கு புறம்பாக இருவரையும் கைது செய்தது தவறு என்று கூறி சயன், மனோஜ் பேட்டியால் எங்கு கலவரம் ஏற்பட்டுள்ளது எனவும் மாஜிஸ்திரேட்டு சரிதா கேள்வி எழுப்பினார்.

மாஜிஸ்திரேட்டு சில சந்தேகங்களை போலீசாரிடம் கேட்டு விளக்கம் அளிக்குமாறு கோரினார். போலீசார் திருப்தி அளிக்கும் வகையில் பதில் அளித்தால்தான் நீதிமன்ற காவலுக்கு அனுப்பமுடியும் என்று மாஜிஸ்திரேட்டு சரிதா தெரிவித்தார்.

எடப்பாடி மீது புகார் கூறிய சயன், மனோஜை போலீசார் கோரிக்கை படி சிறையில் அடைக்க நீதிபதி மறுப்பு; இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவு வழங்குமாறு போலீஸ் தொடர்ந்து வாதம் செய்தனர்.

உங்கள் தரப்பு வழக்கறிஞர் யார்? என்று சயன், மனோஜிடம் நீதிபதி சரிதா கேள்வி கேட்டார் “டெல்லியில் இருந்து வழக்கறிஞர்கள் வாதாட வருவதாக” சயான், மனோஜ் பதில் அளித்தனர்.ஆகையால் இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்ப மறுத்து விட்டார்.

தொடர்ச்சியாக தமிழக காவல்துறை சட்டத்திற்கு புறம்பாக அரசியல்வாதிகளின் சொல்கேட்டு கைதுசெய்வதும் பிறகு கோர்ட் அவர்களை விடுவிப்பதுமாக இருக்கிறது.இதை காவல்துறை ஒரு அவமானமாக கருதவேண்டும். ஒருவரை கைது செய்ய உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் இருக்கிறபோது அதன் அடிப்படையில் கைது செய்ய சட்டத்தை மதிக்க கற்றுக்கொள்ளவேண்டும். அரசியல்வாதிகளின் நிர்பந்தத்திற்கு ஆளாகாமல் தமிழக காவல்துறை பெயரை காக்க வேண்டும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top