கஜா புயல் நிவாரண தொகையை கல்வி கடனுக்கு வரவு வைத்த வங்கி: நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் புகார்

புதுகோட்டை மாவட்டத்தில் விவசாயியிடம் ஒப்புதல் பெறாமல் கஜா புயல் நிவாரண தொகையை மகளின் கல்வி கடனுக்கு பிடித்தம் செய்த வங்கி மேலாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் புகார் அளித்தார் விவசாயி

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம் ஊராட்சி பனசக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் ரம்யா. கொத்தமங்கலத்தில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் கடந்த 2009-ல் ரூ.2.92 லட்சம் கடன் பெற்று, புதுக்கோட்டை அருகே உள்ள தனியார் கல்லூரியில் ரம்யா, பிஎஸ்சி நர்சிங் படித்தார்

இந்நிலையில், புயலால் ராஜேந்திரனின் தென்னை மரங்கள் மற்றும் பயிர்கள் முழுவதுமாக சேதம் அடைந்துவிட்டன. இதையடுத்து, ரூ.34 ஆயிரம் நிவாரணத் தொகையை இவரது வங்கிக் கணக்கில் அரசு செலுத்தியது.

இந்த தகவல் ராஜேந்திரனின் செல்போனுக்கு குறுஞ்செய்தியாக வந்தது. நிவாரணத் தொகையை பெறுவதற்காக வங்கிக்கு ராஜேந்திரன் சென்றபோது, அந்த தொகையை ஏற்கெனவே ரம்யாவின் படிப்புக்காக வழங்கப்பட்ட கல்விக் கடனுக்காக வங்கி நிர்வாகம் வரவுவைத்துக்கொண்டது தெரியவந்தது.

மேலும், ராஜேந்திரன் மற்றும்அவரது மனைவி ராணி ஆகியோர் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்ததற்காக வழங்கப்பட்ட தொகையையும் வங்கி நிர்வாகம் வரவு வைத்துக்கொண்டதும் தெரியவந்தது.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடன் மற்றும் வட்டிசெலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் உத்தரவிட்டுள்ள நிலையில், விவசாயிக்கு அரசால் வழங்கப்பட்ட நிவாரணத் தொகையை வங்கி நிர்வாகமே வரவு வைத்துக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, வங்கி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுத்து நிவாரணத் தொகையை விடுவித்துத் தரக் கோரி ஆட்சியர் அலுவலகத்துக்கு ராஜேந்திரன் நேற்று கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top