குட்கா முறைகேடு; கிரிஜாவைத்தியநாதன் மீதான ஆதாரத்தை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

குட்கா முறைகேடு வழக்கில் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உயர்நீதிமன்றத்தில் பொய் கூறியதால் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க மனு தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு கடிதம் அனுப்பியதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யுமாறு வருமானவரித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த கதிரேசன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

சென்னையில் குட்கா நிறுவன குடோனில் 2016-ல் வருமான வரித் துறை நடத்திய சோதனையில், தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக், புகையிலையை விற்பதற்காக போலீஸார், உயர் அதிகாரிகள் மற்றும் ஆளும் கட்சியினருக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பான விவரங்கள் அடங்கிய டைரி மற்றும் ஆவணங்கள் சிக்கின.

இந்த ஆவணங்கள் தொடர்பாக அப்போதைய தலைமைச் செயலர் ராம மோகனராவ், அப்போதைய டிஜிபி அசோக்குமார் ஆகியோருக்கு வருமான வரி முதன்மை ஆணையர் கடிதம் அனுப்பினார். அதில், குட்கா பொருட்கள் விற்பனைக்கு லஞ்சம் பெற்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்திருந்தார்

.
இந்நிலையில், குட்கா முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி நான் தொடர்ந்த வழக்கில், தற்போதைய தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், வருமானவரித் துறை அனுப்பிய கடிதம் எதுவும் தங்களிடம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில், 2017-ல் வருமானவரித் துறை நடத்திய சோதனையில் குட்கா முறை கேடு தொடர்பாக டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான வருமானவரித் துறை அனுப்பிய கடிதம் சசிகலா அறையில் கைப்பற்றப்பட்டது. இந்த ஆவணங்களை நீதிமன்றத்தில் வருமானவரித் துறையினர் தாக்கல் செய்தனர்.

இதன்மூலம், தலைமைச் செயலர் கிரிஜா வைத்திய நாதன் தவறான தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் என்பது தெரிகிறது. இது தண்டனைக்குரிய குற்றமாகும். இதனால் தலைமைச் செயலர் மீது குற்றவியல் நடைமுறை சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டது.

இந்த மனு, நீதிபதிகள் கே.கே.சசி தரன், பி.டி.ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

தலைமைச் செயலர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “குட்கா புகார் தொடர்பாக வருமானவரித் துறை அனுப்பிய கடிதம் தொடர்பாக தலைமைச் செயலர் அலுவலகக் கோப்புகளை ஆய்வு செய்தபோது, அதுபோன்ற கடிதம் பெறப்பட்டதற்கான தகவல் ஏதும் இல்லை என்றுதான் தலைமைச் செயலர் பதில் மனுவில் கூறியிருந்தார்.

இதற்காக தலைமைச் செயலர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கான எந்த ஆதாரத்தையும் மனுதாரர் தரப்பில் சமர்ப்பிக்கவில்லை” என்றார். இதையடுத்து, வருமானவரித் துறை கடிதம் அனுப்பியது மற்றும் அந்த கடிதம் தலைமைச் செயலர் அலுவலகத்தில் பெறப்பட்டதற்கான ஆவணங்களை மூடி முத்திரையிட்ட கவரில் தாக்கல் செய்ய வருமானவரி முதன்மை இயக்குநருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜன. 21-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top