காஸ்மீரில் தொடரும் கொலைகளை ஊக்குவிக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி பதவி விலகல்

யாரும் கேட்பாரின்றி காஸ்மீரில் தொடர்ந்து நடக்கும் கொலைகளையும் அதை தட்டிக்கேட்காமல் பாராமுகமாக இருக்கும் மத்திய பாஜக அரசையும் கண்டித்து தாம் பதவி விலகுவதாக ஐ.ஏ.எஸ். தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுத் தேர்ச்சி பெற்ற ஷா ஃபைசல் என்னும் அதிகாரி தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக அவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில், 200 மில்லியன் இந்திய முஸ்லிம்கள் இந்துத்துவ சக்திகளால் விளிம்பு நிலைக்கு தள்ளப்படுவதையும், காணாமல் ஆக்கப்படுவதையும், இரண்டாம்தரக் குடிமக்கள் ஆக்கப்படுவதையும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தனி அடையாளத்தின் மீதான தாக்குதலையும், இந்தியப் பெருநிலப் பகுதியில் அதி தேசியவாதத்தின் பெயரால் பெருகும் சகிப்பின்மை, வெறுப்புணர்வு ஆகியவற்றையும் கண்டித்தும் தாம் இந்திய ஆட்சிப் பணியில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

“இந்திய ரிசர்வ் வங்கி, சி.பி.ஐ., தேசிய புலனாய்வு முகமை, ஆகிய பொது நிறுவனங்களை சிதைப்பது இந்த நாட்டின் அரசமைப்புச் சட்டக் கட்டுமானத்தை அழிக்கவல்லது எனவே இவற்றை நிறுத்தவேண்டும் என்று இன்றைய ஆட்சியாளர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.

“பகுத்தறியும் குரல்களை இந்த நாட்டில் நீண்ட நாள்களுக்கு முடக்கிவைக்க முடியாது என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். உண்மையான ஜனநாயகத்தில் நடைபோட விரும்பினால் முற்றுகையிட்டதைப் போன்ற சூழல் முடிவுக்கு வரவேண்டும்.

இந்திய ஆட்சிப் பணியில் எனது சிறப்பான பயணத்துக்கு உறுதுணையாக இருந்த எனது குடும்பத்தினர், நண்பர்கள், நலம் விரும்பிகள் ஆகியருக்கு நன்றி.
ஐ.ஏ.எஸ். கனவோடு இருப்பவர்களுக்கு பயிற்சி அளித்து வழிகாட்டுவதே என் முக்கியப் பணிகளில் ஒன்று,” என்று அவர் கூறினார்.

“என் எதிர்காலத் திட்டங்களைப் பற்றி பகிர்ந்துகொள்வதற்காக வெள்ளிக்கிழமை பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசுகிறேன். இந்தப் புதிய பணியில் உங்கள் ஆதரவையும், ஆசியையும் எதிர்பார்க்கிறேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். ட்விட்டரிலும் அவர் இது தொடர்பாக அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

இந்த பதவி விலகலை வரவேற்றுள்ளார் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா. இது தொடர்பாக வெளியிட்ட ஒரு ட்விட்டர் பதிவில், நிர்வாகத் துறைக்கு ஏற்பட்ட இழப்பு, என்று கூறியிருக்கிறார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top