மோடி ஆட்சியில் குஜராத் என்கவுன்ட்டர் கொலைகள்: பேடி கமிட்டி அறிக்கையை பகிர உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

மோடி குஜராத் முதல்வராக இருந்த காலகட்டத்தில் நடந்த 21 போலீஸ் என்கவுன்ட்டர்கள் தொடர்பான உச்ச நீதிமன்ற நியமன ஓய்வு பெற்ற நீதிபதி எச்.எஸ்.பேடி கண்காணிப்பு கமிட்டியின் இறுதி அறிக்கையை வெளிப்படுத்த வேண்டாம் என்ற குஜராத் அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த காலக்கட்டத்தில் 21 போலீஸ் என்கவுன்ட்டர்கள் நடந்தது.இது தொடர்பாக பத்திரிகையில் எழுதியவர்களுக்கு மறைமுகமாக மிரட்டல்களும் தாக்குதல்களும் அரங்கேறின. குஜராத்தில் மோடியின் காலகட்டத்தில் நடந்த படுகொலைகளை சர்வதேசமும் உற்றுக் கவனித்தது. இஸ்லாமியர்கள் திட்டமிட்டு படுகொலைச் செய்யப்படுவதை சர்வதேசம் கண்டித்தது. மோடியின் ஆட்சியில் மோடியை விமர்சித்தவர்களும் என்கௌன்டர் செய்யப்பட்டார்கள்.இந்த சூழலில்தான் அமெரிக்கா கூட மோடியை தங்கள் நாட்டிற்குள் விடமாட்டோம் என்று தடுத்துவைத்தார்கள்.

குஜராத்தில் தொடர்ச்சியான படுகொலைகளும் என்கௌண்டர்களும் நடந்ததை கண்டு உச்சநீதிமன்றம் இது தொடர்பான ஓய்வு பெற்ற நீதிபதி எச்.எஸ்.பேடி கண்காணிப்பில் கமிட்டி ஒன்றை அமைத்து அறிக்கை தாக்கல் செய்யச் சொன்னது. நீதிபதி பேடி கண்காணிப்பு கமிட்டி10 அறிக்கைகளை தாக்கல் செய்தது.

இறுதியாக ஓய்வு பெற்ற நீதிபதி பேடி கண்காணிப்பு கமிட்டியின் இறுதியும் 11 -வதுமான அறிக்கை கடந்த ஆண்டு ஜனவரியில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது ரகசிய அறிக்கையாக பாதுகாக்கப்பட்டது.

ஓய்வு பெற்ற நீதிபதி பேடி கண்காணிப்பு கமிட்டியின் இறுதியும் 11 –வதுமான அறிக்கையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டாம் என்று குஜராத் அரசு கோரிக்கை வைத்தது. பிறகு அந்த அறிக்கை மிகவும் இரகசிகமாக உச்சநீதிமன்றத்தில் பாதுகாக்கப்பட்டு, மோடி ஆட்சியில் நடந்த போலி என்கௌண்டேர்களைப் பற்றியான அறிக்கை மக்களுக்கு தெரிவிக்கப்படாமல் மறைக்கப்பட்டு வந்தது

இறுதி அறிக்கையை வெளிப்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், மற்றும் மறைந்த பத்திரிகையாளர் பி.ஜி.வர்கீஸ் ஆகியோர் பொது நல மனு போட்டு வழக்கு பதிவு செய்தார்கள்.

இவர்களுக்கு எதிராக அறிக்கையை வெளிப்படுத்த வேண்டாம் என்று குஜராத் அரசின் சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது

இது தொடர்பான வழக்கு விசாரணையில் இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வுவில் வந்தது.

அப்போது “இது குற்றம்சாட்டப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்டவர் ஆகியோர் தரப்பில் முன் அனுமானங்களை ஏற்படுத்தும்” என்று குஜராத் அரசு வழக்கறிஞர் ரஜத் நாயர் தெரிவித்தார். இவர் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்குப் பதிலாக ஆஜரானார், இவர் முன்னதாக துஷார் மேத்தா வேறு ஒரு வழக்கில் இருப்பதால் வழக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறு கோரினார், கோர்ட் இதனை ஏற்கவில்லை.

ரஜத் நாயர் கேள்விக்கு எதிர்வினையாற்றிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், பதிவு செய்ய வேண்டி “நீங்கள் யார்?” என்றார். அவர் அதற்கு “குஜராத் மாநிலஅரசு” என்று பதிலளித்தார். இதற்கு தலைமை நீதிபதி, “பிறகு உங்கள் நலன்களைப் பாருங்கள்” என்றார்.

பிறகு கூறிய தலைமை நீதிபதி, “நாங்கள் பேடி கமிட்டியின் அறிக்கையை ஏற்கவில்லை, ஆனால் அறிக்கை பகிரப்பட வேண்டும் என்றுதான் கூறுகிறோம்” என்றார்.

அதாவது, “இது 225 பக்க அறிக்கையாகும்.. அறிக்கையில் என்ன உள்ளது என்பது எங்களுக்குத் தெரியாது.. அறிக்கையை ஏற்பது பற்றிய முடிவு பிற்பாடு எடுக்கப்படும். எங்கள் உத்தரவுக்கிணங்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆகவே இந்த அறிக்கையை பரிசீலிக்கும் போது நீங்கள் என்ன கூற வேண்டுமோ கூறுங்கள்” என்று வாய்மொழியாக தலைமை நீதிபதி கோகய் தெரிவித்தார்.

பிறகு மூத்த வழக்கறிஞர் ராகேஷ் த்வேதி, கூறும்போது, மனுதாரர்களுக்கு இந்த வழக்கில் எந்த வித நிலைப்பாடும் இருக்க முடியாது. இதனை வெளியிட்டால் குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக முன் அனுமானங்கள் எழும். விசாரணை நீதிமன்றமே பேடி அறிக்கையை அறிய முடியும் என்றார்.

இதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், இப்போதே விசாரணை நீதிமன்றத்துக்கு பேடி அறிக்கையை அனுப்ப வேண்டுமா? என்றார்.

முந்தைய விசாரணையில் பேடி அறிக்கையையே குஜராத் அரசு எதிர்த்தது. அதாவது நீதிபதி பேடி மற்ற உறுப்பினர்களை கலந்தாலோசிக்காமல் அறிக்கை தயாரித்ததாக குற்றம் சாட்டியது.

இந்நிலையில் இன்று ரஞ்சன் கோகய் கூறும்போது, “2012-ல் உச்ச நீதிமன்றம் கொடுத்த அதிகாரத்தின் அடிப்படையிலேயே விசாரித்து அறிக்கை தயாரித்துள்ளது. “நாங்கள் நம்பிக்கை வைத்த ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி எங்கள் உத்தரவுக்கேற்ப செயல்பட்டுள்ளார்., இப்போது அவரது அறிக்கையை நாங்கள் ஏற்கக் கூடாது என்று எப்படி கூற முடியும்?” என்றார்.

மறைந்த பத்திரிகையாளர் வர்கீஸ் தனது மனுவில், 2003-2006 இடையே நடந்த என்கவுன்ட்டர்கள் குறித்து சந்தேகம் எழுப்புகிறார். குஜராத் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட என்கவுன்ட்டர் பட்டியலைத்தான் வர்கீஸும் கோர்ட்டில் தாக்கல் செய்து அதாவது என்கவுன்ட்டர்கள் ஒரே வகைமாதிரியாக உள்ளது சந்தேகத்தை வரவழிக்கிறது என்றும் புலம்பெயர்ந்த தொழிலாளி முதல் சந்தேக பயங்கரவாதிகள் வரை என்கவுன்ட்டர்கள் ஒரே வகைமாதிரியில் இருப்பது சந்தேகத்தை வரவழைக்கிறது, என்கவுண்டரில் கொல்லப்பட்டவர்களின் வயது 22 முதல் 37 வயதானவர்களாகவே இருக்கிறது. சாதாரணக் குடிமகன்களை ஆயுதம் ஏந்தியவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றல்லவா இருக்கிறது என்று அவர் சந்தேகம் எழுப்பினார்.

ஜாவேத் அக்தரும், கொல்லப்பட்ட அனைவரும் ஜே.இ.எம். பயங்கரவாதிகள் என்றும் இவர்கள் மோடியைக் கொலை செய்ய சதி செய்தனர் என்றும் கூறுகின்றனர். இது எப்படி என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் பேடி கமிட்டி அறிக்கையை மனுதாரர்களிடம் பகிர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் குஜராத் மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, பொதுநல மனுதாரர்களுடன் ரகசியமாக இருக்கும் நீதிபதி பேடி கமிட்டி அறிக்கையை பகிர வேண்டும் என்று உத்தரவிட்டது.

மேலும், இந்த மனுதாரர்கள் ஊடகத்திடமும் மக்களிடமும் நீதிபதி பேடி கண்காணிப்பு அறிக்கையை பகிர்ந்து கொள்ளக் கூடாது என்ற குஜராத் அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top