2-வது நாளாக மத்திய தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்: ரயில்,சாலை மறியலில் ஈடுபட்ட 1,500 பேர் கைது

இரண்டாவது நாளாக புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், காலிப் பணியிடங்களை நிரப்புதல், விலைவாசியை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு தொழிற்சங்கங்கள் நேற்றும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன.

ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்ட சுமார் 1,500 பேர் கைது செய்யப்பட்டனர். வங்கிச் சேவைகள் 2-வது நாளாக நேற்றும் பாதிப்படைந்தது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்கக்கூடாது என்பது உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளுக்காக மத்திய தொழிற்சங்கங்களான ஐஎன்டியூசி, ஏஐடியூசி, சிஐடியூ, எச்எம்எஸ், ஏஐசிசிடியூ, எல்பிஎப் உள்ளிட்ட 12 தொழிற்சங்கங்கள் கடந்த 2 நாட்களாக நாடு தழுதவிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தின. இதன்படி, 2-வது நாளாக நேற்று நடந்த போராட்டத்தில் அஞ்சல் துறை, வருமானவரித் துறை, காப்பீட்டுத் துறை உள்ளிட்ட மத்திய அரசு ஊழியர்கள் ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்றனர். தொழிற்சங்கங்கள் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. பெரம்பூரில் சிஐடியூ, ஏஐடியூசி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ மகேந்திரன் தலைமையில் தொழிற்சங்கத்தினர் பெரம்பூர் ரயில் நிலையம் நோக்கி ஊர்வலமாகச் சென்றனர்.

தடையை மீறி ரயில் நிலையத்துக்குள் செல்ல முயன்றவர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர். எனினும், உள்ளே நுழைந்த தொழிற்சங்கத்தினர் மின்சார ரயிலை மறித்தனர். இதுதொடர்பாக, 300 பேர் கைது செய்யப்பட்டனர். கிண்டியில் ரயில் மறியல் இதேபோல், சிஐடியூ தொழிற்சங்க மாநில தலைவர் அ.சவுந்தரராஜன் தலைமையில் கிண்டியில் ரயில் மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக, சவுந்தரராஜன், முன்னாள் எம்எல்ஏ பீம்ராவ் உள்ளிட்ட 700 பேர் கைது செய்யப்பட்டனர். போராட்டம் குறித்து, ஆர்.சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘2 நாள் வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதன் பிறகும் மத்திய அரசு கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால் அடுத்த கட்டமாக தீவிர தொடர் போராட்டத்தை மேற்கொள்வோம்’’ என்றார்.

அண்ணா சாலையில் சிஐடியூ, ஐஎன்டியூசி, ஏஐடியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் கைது செய்யப்பட்டனர். வங்கிச் சேவைகள் 2-வது நாளாக நேற்றும் பாதிப்படைந்தன. வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் முழு அளவில் வெற்றி பெற்றுள்ளதாக இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழக பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன் தெரிவித்தார்.

அஞ்சல், காப்பீடு, தொலைத்தொடர்பு துறையில் வாடிக்கையாளர் சேவைகள் பாதிக்கப்பட்டன. போராட்டத்துக்கு ஆதரவாக, பதவி உயர்வு பெற்ற மத்திய அரசுத்துறை அதிகாரிகள் சாஸ்திரிபவனில் பொதுச்செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதேபோல், மத்திய அரசு அலுவலகங்களான வருமான வரித்துறை, சுங்கத் துறை, கலால்துறை மற்றும் சாஸ்திரிபவன், ராஜாஜிபவன் ஆகிய இடங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் குரூப்-சி, குரூப்-டி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பணிகள் பாதிப்படைந்தன. தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்திலும் தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top