புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்டம்; விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து உருவாக்கப்படுகிறது;சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு

சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.

தமிழகத்தில் மொத்தம் 32 மாவட்டங்கள் உள்ளன .இந்த நிலையில் புதிதாக மேலும் ஒரு மாவட்டம் உருவாக்கப்படுகிறது. அதாவது, விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிதாக ஒரு மாவட்டம் உருவாக்கப்படுகிறது.

சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது கடந்த 4, 5, 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற விவாதத்தின் போது முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

“சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகமும், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் குமரகுருவும், விழுப்புரம் மாவட்டம் பெரிய மாவட்டமாக உள்ளதால், அதனை பிரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைப்பதாக என்னிடம் தெரிவித்தார்கள்.

இதனை பரிசீலித்து, விழுப்புரம் மாவட்டம், பெரிய மாவட்டமாக இருப்பதால், நிர்வாக வசதிக்காக அந்த மாவட்டத்தை பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்படும். புதிதாக தோற்றுவிக்கப்படும் இந்த மாவட்டத்துக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் விரைவில் தனி அதிகாரியாக நியமிக்கப்படுவார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்”.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய மாவட்டம் என்ற சிறப்பை பெற்ற விழுப்புரம் மாவட்டம், 1993-ம் ஆண்டு செப்டம்பர் 30-ந் தேதி தென்ஆற்காடு மாவட்டத்தில் இருந்து புதிதாக உதயமானது. முதலில் விழுப்புரம் ராமசாமி படையாச்சியார் மாவட்டம் என்று அழைக்கப்பட்டு, பின்னர் விழுப்புரம் மாவட்டமாக பெயர் மாறியது. 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, விழுப்புரம் மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை 34 லட்சத்து 58 ஆயிரத்து 873 ஆகும். இந்த மாவட்டத்தில் 13 தாலுகாக்கள் உள்ளன.

புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்டம் அமைக்கப்படுவதை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 33 ஆக உயருகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top