உச்ச நீதிமன்றத்தில் வழக்கு;திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வரும் 28-ம் தேதி நடக்க இருந்த திருவாரூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருவாரூர் தொகுதி எம்எல்ஏவும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதி மறைவுக்குப்பின் அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் திருவாரூர் தொகுதிக்கு வரும் 28-ம் தேதி இடைத்தேர்தலும், 31-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

ஆனால், கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்ட மக்களுக்கு இன்னும் நிவாரண உதவிகள் முழுமையாகக் கிடைக்கவில்லை, நிவாரணப்பணிகள் முழுமையாக நடைபெறாமல் மக்கள் இயல்புநிலைக்குத் திரும்புவதில் இன்னும் இடர்பாடுகள் நீடிப்பதால், தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்துக்குக் கோரிக்கை விடுத்திருந்தன.

மேலும், எம்.எல்.ஏ-க்கள் தகுதியிழப்பு தீர்ப்பால் காலியாக இருக்கும் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படாதது குறித்துப் பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினர். ஆனால், தேர்தலுக்குத் தயாராகும் வகையில், திமுக, அமமுக, உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்தன. ஆளும் அதிமுக தனது வேட்பாளரை இன்று அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கிடையே, திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து, ரத்தினக்குமார் ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வர உள்ளது. மேலும் தேர்தல் ஆணையத்திலும் தேர்தலை ரத்து செய்யக்கோரி டி ராஜா மனு அளித்திருந்தார்.

இந்த நிலையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம், திருவாரூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட தேர்தலை ரத்து செய்வதாகவும், மாநிலத் தேர்தல் ஆணையமும் மாவட்ட அதிகாரிகளும் இடைத்தேர்தல் தொடர்பாக எடுத்த அனைத்துப் பணிகளை நிறுத்துமாறும் தமிழகத் தேர்தல் அதிகாரிக்குத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top