சென்னை நந்தனம் ஒய்எம்சிஏமைதானத்தில் 42-வது புத்தகக் காட்சி; 1.5 கோடி புத்தகங்கள் குவிப்பு!

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 42-வது புத்தகக் காட்சி இன்றுமுதல் நடக்கவிருக்கிறது. 820 அரங்குகள், 1.5 கோடி புத்தகங்களுடன் கூடிய இந்த பிரம்மாண்ட புத்தகக் காட்சி 20-ம்தேதி வரை நடக்கிறது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் சென்னையில் ஆண்டுதோறும் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. சென்னைவாசிகள் மட்டுமின்றி தமிழகம் மற்றும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் புத்தக ஆர்வலர்கள் இந்த கண்காட்சிக்கு வருவது வழக்கம். இந்நிலையில், 42-வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று தொடங்கி 20-ம் தேதி வரைதொடர்ந்து 17 நாட்கள் கோலாகலமாக நடைபெற உள்ளது.

இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் விழாவில், தமிழக முதல்வர் பழனிசாமி புத்தகக் காட்சியை தொடங்கிவைத்து சிறப்பு விருதுகளை வழங்குகிறார். பபாசி தலைவர் எஸ்.வயிரவன், செயலாளர் ஏஆர்.வெங்கடாச்சலம் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

இந்த புத்தகக் காட்சியில் மொத்தம் 820 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 12 லட்சம் தலைப்புகளில் சுமார் 1.5 கோடி புத்தகங்கள் இடம்பெறுகின்றன. இங்கு வாங்கப்படும் புத்தகங்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். பதிப்பகங்களைப் பொறுத்து, கூடுதல் தள்ளுபடியும் பெறலாம்.

புத்தக ஆர்வலர்களின் வசதியைகருத்தில்கொண்டு தமிழ், ஆங்கிலம், மல்டிமீடியா, பொது அரங்குகள் என தனித்தனி அரங்குகளாக அமைக்கப்பட்டுள்ளன. தினமும் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரையும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும் பார்வையிடலாம்.

ஆன்லைனில் நுழைவுச் சீட்டுநுழைவுக் கட்டணம் ரூ.10. இந்த ஆண்டு முதல்முறையாக நுழைவுச் சீட்டை ஆன்லைனில் பெறும் வசதியை பபாசி அறிமுகம் செய்துள்ளது. பபாசி இணையதளத்தில் (www.bapasi.com) ரூ.10 செலுத்தி ஆன்லைனில் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதற்கு கூடுதல் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படாது. அனைத்து நாட்களும் புத்தகக் காட்சியை பார்வையிடுவதற்கான நுழைவு பாஸ் கட்டணம் ரூ.100.

புத்தகக் காட்சி வளாகத்தில் ஏடிஎம், இலவச வைஃபை, செல்போனுக்கு சார்ஜ் செய்துகொள்ளும் வசதி, உணவகம், மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் தினமும் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் சிறப்பு மேடை நிகழ்ச்சிகள், பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, வளரும் இயக்குநர்களை ஊக்குவிக்கும் வகையில் குறும்படம், ஆவணப் படங்களை திரையிட தனி அரங்கு, வாசகர்கள் – எழுத்தாளர்கள் சந்திப்பு, முன்னணி எழுத்தாளர்களுடன் உரையாடல், தமிழின் தலைசிறந்த ஆளுமைகள், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள், திரைத்துறை கலைஞர்கள் பங்கேற்கும் கலந்துரையாடல் என பல்வேறு நிகழ்ச்சிகளும் புத்தகக் காட்சியில் இடம்பெறுகின்றன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top