மெக்சிகோ தடுப்புச்சுவர்-570 கோடி டாலர் அமெரிக்க பாராளுமன்றம் நிதி ஒதுக்கீடு; எதிர்க்கட்சியினர் வருத்தம்

மெக்சிகோ எல்லைப்பகுதியின் குறுக்கே 2 ஆயிரம் மைல் நீளத்துக்கு தடுப்புச்சுவர் கட்டும் அதிபர் டிரம்ப் திட்டத்துக்கு 570 கோடி டாலர் நிதி ஒதுக்கீட்டுக்கு அமெரிக்க பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

மெக்சிகோ நாட்டில் இருந்து ஆண்டுதோறும் ஏராளமானோர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுவதாக டொனால்டு டிரம்ப் கூறிவந்த நிலையில் இதைத் தடுப்பதற்காக ஏற்கனவே அங்கு 670 மைல் தொலைவுக்கு பல பகுதிகளிலும் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இருநாட்டு எல்லைப் பகுதியில் 2 ஆயிரம் மைல் நீளத்துக்கு மிகப்பெரிய தடுப்புச்சுவர் கட்டப்படும் என அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது டொனால்டு டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார்.

அதன்படி, தேர்தலில் வெற்றி பெற்று, ஜனாதிபதி பதவியை ஏற்றநிலையில், மெக்சிகோ எல்லையில் தடுப்புச்சுவர் கட்டுவதற்கான நிர்வாக உத்தரவில் கடந்த ஆண்டு டிரம்ப் கையொப்பமிட்டார்.

அதுமட்டுமின்றி, இந்த தடுப்புச்சுவர் கட்டுவதற்கான பணத்தை மெக்சிகோ தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஆனால், அதை மெக்சிகோ நிராகரித்து விட்டது. இதுதொடர்பாக மெக்சிகோ அதிபர் என்ரிக் பெனா நீட்டோ கருத்து தெரிவிக்கையில், “சுவர்களில் மெக்சிகோவுக்கு நம்பிக்கை இல்லை. நான் இதை பல முறை கூறி விட்டேன். இந்த சுவருக்காக மெக்சிகோ எந்தப் பணமும் தராது” என முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த திட்டத்துக்காக தேவைப்படும் நிதியில் 570 கோடி டாலர் நிதி ஒதுக்கீட்டுக்கு அமெரிக்க பாராளுமன்றம் இன்று ஒப்புதல் அளித்தது. இதுதொடர்பான விவாதத்தின்மீது பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்த நிதி ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக ஆளும் குடியரசு கட்சியை சேர்ந்த 217 உறுப்பினர்களும் எதிராக ஜனநாயக கட்சியை சேர்ந்த 185 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

எனினும், டிரம்ப்பின் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த பாராளுமன்ற மேல்சபையில் நாளை இதுதொடர்பாக நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் அவருக்கு சற்று பின்னடைவு ஏற்படலாம் என கருதப்படுகிறது.

மதில் சுவர் கட்டுவதற்காக இவ்வளவு பெரிய தொகையை முடக்கினால் அமெரிக்க அரசின் பிற முக்கிய துறைகளுக்காக ஒதுக்கப்படும் நிதியில் பற்றாக்குறை ஏற்படலாம் என்ற காரணத்தை முன்வைத்து மதில் சுவருக்கான நிதி ஒதுக்கீட்டை மேல்சபையில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நிராகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top