பொன் மாணிக்கவேல் மீது 13 போலீஸ் அதிகாரிகள் பரபரப்பு புகார்; தமிழக அரசின் அதிரடி விளையாட்டு!

சிலை கடத்தல்காரர்களை விரட்டி விரட்டி பிடிக்கும் விசாரணை அதிகாரி பொன்மாணிக்கவேல் மீது 13 காவல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபியிடம் அளித்துள்ளனர்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக பதவி வகித்த பொன்மாணிக்கவேல் சமீபத்தில் பணி ஓய்வு பெற்றார். ஆனால் அவரது பணிக்காலத்தை மேலும் ஒரு வருடம் நீட்டிப்பு செய்து சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி மகாதேவன் அமர்வு உத்தரவிட்டது.

அரசுக்கும் பொன்மாணிக்கவேலுக்கும் நடுவே பகிரங்கமாகவே மோதல் போக்கு இருந்து வந்த நிலையில், அவருக்கு பதவி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது அரசுக்கு பிடிக்கவில்லை. இந்த நிலையில் பொன்மாணிக்கவேல் குழுவில் பணியில் இருந்த 60 போலீசார் வேறு துறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

மாற்றம் செய்யப்பட அதிகாரிகளை திரும்பவும் பணியில் நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார் பொன் மாணிக்கவேல்.

இந்த நிலையில், தமிழக போலீஸ் டிஜிபியிடம், சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றிய 13 அதிகாரிகள் சேர்ந்து ஒரு புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரில் சட்டத்துக்கு புறம்பாக வழக்கு பதிவு செய்ய பொன் மாணிக்கவேல் தங்களை வற்புறுத்தியதாக தெரிவித்துள்ளனர். உரிய ஆவணங்கள், சாட்சிகள் இல்லாமல் வழக்கு பதிவு செய்ய அவர் வற்புறுத்தியதாகவும். அவ்வாறு பொய் வழக்கு போடாததால், தங்களை திட்டியதுடன், மிரட்டியதாகவும் அந்த புகாரில் கூறியுள்ளனர். இந்த புகாரை தொடர்ந்து பொன் மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் பொன்மாணிக்கவேல் விசாரணைக்கு இடையூறு ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக பொன்மாணிக்கவேலை நியமித்தது சென்னை உயர்நீதிமன்றம்.இதில் தமிழக அரசுக்கு உடன்பாடு இல்லாததால் சிலை கடத்தல் தொடர்பான விவகாரத்தை சிபிஐ க்கு மாற்ற உத்தரவு பிறப்பித்தது தமிழக அரசு.

சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசின் அரசாணையை நீக்க உத்தரவு இட்டது. பொன் மாணிக்கவேல் ஓய்வு பெற்றுவிடுவார் என்றிருந்த நிலையில் அவரது பதவியை உயர் நீதிமன்றம் மேலும் ஒரு வருடம் நீட்டித்து உத்தரவு வழங்கிய இந்த சூழலில் 13 காவல் அதிகாரிகள் மூலம் உயர்நீதிமன்றம் மற்றும் பொன்மாணிக்கவேல் இருவருக்கும் எதிரான விளையாட்டை விளையாட ஆரம்பித்து இருக்கிறது தமிழக அரசு..


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top