இராஜபக்சே இலங்கையின் பிரதமராக செயல்பட இலங்கை நீதிமன்றம் மேலும் ஒரு அதிரடி உத்தரவை கொடுத்து இருக்கிறது.
அதிகார மோதல் தீர்ந்து முடிவு எட்டப்படும் வரை பிரதமர் மஹிந்தா ராஜபக்சயின் அதிகாரம் முடக்கி வைக்கப்படுவதாக அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர் நீதிமன்றத்தில் டிசம்பர் 12-ம் தேதி ஆஜராகவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை கடந்த அக்டோபர் 26-ம் தேதி அதிபர் சிறிசேனா பதவி நீக்கம் செய்தார். புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சவை நியமித்தார். நாடாளுமன்றத்தையும் முடக்கினார்.
உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக நாடாளுமன்றம் மீண்டும் கூடியது. நம்பிக்கை வாக்கெடுப்பில் ரணில் பெரும்பான்மையை நிரூபித்தார். மஹிந்த ராஜபக்ச தோல்வியைத் தழுவினார். ஆனால் அதிபர் சிறிசேனா வாக்கெடுப்பை ஏற்க மறுத்தார்.
எனினும், ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தாலும் ரணில் விக்ரம சிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன், என்னால் அவரோடு இணைந்து பணியாற்ற முடியாது, வேறு யாரையாவது ஐக்கிய தேசிய கட்சி பரிந்துரை செய்யலாம் என அதிபர் சிறிசேனா கூறி வருகிறார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிக்க முடியாத நிலையில் ராஜபக்ச அதிபராக நீடிக்க எதிர்ப்பு தெரிவித்து 122 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட மனுவை, மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரித்தது. இதுதொடர்பாக இன்று உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், ராஜபக்ச பிரதமராக செயல்பட தடை விதித்து இன்று உத்தரவு பிறப்பித்தது.
மேலும் அமைச்சவையை அவர் கூட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ராஜபக்சவும், அமைச்சர்களும் டிசம்பர் 12-ம் தேதி ஆஜராக வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது