முன்னாள் நீதிபதி குரியன் ஜோஸப் பரபரப்பு புகார்; தீபக் மிஸ்ரா ‘ரிமோட் கன்ட்ரோல்’ மூலம் இயக்கப்பட்டார்

சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் கருத்து நீதித்துறையில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வெளிப்புற சக்திகளால் ‘ரிமோட் கன்ட்ரோல்’ மூலம் இயக்கப்பட்டார் என்று ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோஸப் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த குரியன் ஜோஸப் கடந்த நவம்பர் 29-ஆம் தேதியுடன் ஓய்வுபெற்றார். இந்நிலையில், குரியன் ஜோஸப் நேற்று செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வெளிப்புறத்தில் இருந்து வந்த சில சக்திகளுக்கு மத்தியில் பணியாற்றினார். வெளிப்புறத்தில் இருந்து ரிமோட் கன்ட்ரோல் மூலம் நீதிபதி தீபக் மிஸ்ரா இயக்கப்பட்டார். நீதித்துறையின் நிர்வாகத்திலும் அந்த வெளிப்புறச் சக்தியின் தாக்கம் இருந்தது.

இதை எந்த அடிப்படையில் கூறுகிறேன் என்றால் கடந்த ஜனவரி மாதம் நான் உள்பட 4 நீதிபதிகளும் இதை உணர்ந்துதான் தீபக் மிஸ்ராவுக்கு எதிராகப் பேட்டி அளித்தோம். அப்போதுதான் தீபக் மிஸ்ரா பாரபட்சத்தோடு வழக்குகளை ஒதுக்குகிறார் என்று அறிய முடிந்தது.

நான் உள்ளிட்ட 4 நீதிபதிகள் முன்வைத்த பிரச்சினைகளுக்கும், மாற்றங்களுக்கும் தீர்வு காணும் நடவடிக்கையை நீதிபதி தீபக் மிஸ்ரா கண்டறிந்து நடவடிக்கை எடுக்கத் தொடங்கி விட்டார். அதன் பிறகு, தற்போதைய நீதிபதி ரஞ்சன் கோகாய் காலத்திலும் அந்த நடவடிக்கை தொடர்கிறது. இவ்வாறு குரியன் ஜோஸப் தெரிவித்தார்.

ஆனால், யார் அந்த வெளிப்புறச் சக்திகள்?, அரசியல் கட்சிகளா, அல்லது மத்திய அரசா, அல்லது வெளிப்புறச் சக்தியால் நீதித்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தியதா என்பதை குரியன் ஜோஸப் கூற மறுத்துவிட்டார். எந்த குறிப்பிட்ட வழக்கில் தாக்கம் இருந்தது என்பதையும் அவர் குறிப்பிட மறுத்துவிட்டார்.

கடந்த ஜனவரி மாதம் உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் குரியன் ஜோஸப் ஜே.செலமேஸ்வர், ரஞ்சன் கோகாய்(தற்போதைய தலைமை நீதிபதி), மதன் பி.லோகுர் ஆகியோர் தீபக் மிஸ்ராவுக்கு எதிராகப் பேட்டியளித்து முக்கியமான வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக இவர்கள் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோஸப் கூறிய புகார் குறித்து விசாரணை தேவை என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. அந்தக் கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், நீதித்துறையில் வெளிப்புறச் சக்தியின் தாக்கம், பாதிப்பு இருந்தது என்பதையும், ரிமோட் கன்ட்ரோல் மூலம் நிர்வாகம் இருந்தது என்பதையும் உணர்ததிவிட்டார்.

இது குறித்து உடனடியாக பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும். நீதித்துறையின் உண்மைச் சூழலை தேசம் அறிய வேண்டும். மத்திய அரசு சட்டவிரோதமாக சில முயற்சிகள் செய்வதை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். இது தொடர்பாக நாடாளுமன்றக் குழு மூலம் விசாரணை நடத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

இது குறித்து முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் பராசரன் கூறுகையில், “ முன்னாள் நீதிபதி குரியன் ஜோஸப் கூறிய குற்றச்சாட்டுக்கள் தீவிரமானவை. அதேசமயம் அவர் ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை கூறுவது சிறப்பானதாகும். குரியன் ஜோஸப் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். இந்த விஷயம் இத்துடன் முடியாது, இந்த விஷயம் குறித்து தலைமை நீதிபதிக்குத் தெரியும், அவர் என்ன செய்வார் என பார்க்கலாம். இந்த குற்றச்சாட்டு மூலம் நீதித்துறையே சிக்கலில் இருக்கிறது என்று நினைக்கவில்லை. பல்வேறு நெருக்கடியான நேரத்தில்கூட நீதிபதிகள் மிகுந்த நேர்மையுடன், சுதந்திரமாக முடிவுகளை எடுத்திருக்கிறார்கள். அந்த நீதிபதிகள் ஒருபோதும் எந்தச் சூழலிலும் யாருக்கும் பணியாதவர்கள். ஆதலால், எனக்கு நீதித்துறை மீது மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. இப்போதுதான் விவாதம் கிளம்பியிருக்கிறது, விரைவில் பல்வேறு விஷயங்கள் வெளிவரும் “ எனத் தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top