தூங்கிய தமிழக அரசு விழித்தது; மேகதாது பிரச்சனை- சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு

மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று மனு தாக்கல் செய்தது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் சுமார் ரூ.6 ஆயிரம் கோடி செலவில் அணை கட்டுவதற்கான பணியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதை தடுத்து நிறுத்தவேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் சொல்லிவந்தன
தமிழக அரசு அதை காதில் வாங்காமல் உறக்கத்தில் இருந்து விட்டு அணைகட்ட மத்திய நீர்வளத் துறை ஆணையம் அனுமதி வழங்கி உள்ள நிலையில் இப்போது உச்சநீதிமன்றத்தில் இதை எதிர்த்து மனு தாக்கல் செய்திருக்கிறது.தமிழகத்தின் ஒவ்வொரு உரிமையையும் இந்த ஆட்சியில் நாம் பறிகொடுத்து வருகிறோம் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

மேகதாது அணைக்கான ஆரம்பகட்ட ஆய்வு நடத்த கர்நாடகா அரசின் சார்பில் மத்திய நீர்வளத்துறை ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டு இருந்தது. அப்போது அணைகட்ட தமிழகம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டபோது ஆய்வுக்கு மட்டும்தான் அனுமதி அளிக்கிறோம். அணைக்கு அல்ல என்று மத்திய அரசு பதில் அளித்தது. தமிழக அரசும் அதை கண்டுக்கொள்ளாமல் இருந்துவிட்டது

இந்த நிலையில் மேகதாது அணை தொடர்பாக செயல் திட்ட வரைவு அறிக்கையை மத்திய நீர்வளத்துறை ஆணையத்திடம் கர்நாடக அரசு தாக்கல் செய்து இருந்தது.

அணை அமையும் இடம், அணைக்கான திட்ட மதிப்பீடு, அணையின் பலன்கள் உள்ளிட்ட தகவல்களை உள்ளடக்கிய இந்த வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வளத் துறை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. குடிநீர்தேவை, மின்சார உற்பத்திக்காக காவிரியின் குறுக்கே அணை கட்டுவதாக கர்நாடகா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தற்போது வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் பெற்றுவிட்டதால் இறுதி அறிக்கையை தயாரிக்கும் பணியில் கர்நாடக அரசு ஈடுபடும். அதற்கும் மத்திய அரசு ஒப்புதலை பெற்று விட்டால் மேகதாதுவில் அணை அமைவதை தடுக்க இயலாது.

மத்திய அரசின் இந்த ஒப்புதலுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்பு தெரிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு இப்போதுதான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.

இதுவரை அனைத்துக்கட்சி கூட்டத்தைகூட இன்னும் கூட்டவில்லை.இந்த சந்தர்பத்தில் எதிர் கட்சியான திமுக அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டி திருச்சியில் மாபெரும் போராட்டத்தை வருகிற டிசம்பர் 4 ந்தேதி நடத்த திட்டமிட்டிருக்கிறது

இந்த நிலையில் மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு தொடர்ந்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்ட கர்நாடகா அரசு முயற்சி சட்ட விரோதமான செயலாகும். தமிழக விவசாயிகளின் நலனுக்கு எதிரான திட்டமாக இந்த திட்டம் அமைந்து விடும்.

தமிழக மக்களின் வாழ்வதாரத்தை கருத்தில் கொள்ளாமல் திட்டமிடப்பட்டுள்ள மேகதாது அணையை கட்ட கோர்ட்டு தடை விதிக்க வேண்டும். தமிழக அரசு மனு மீதான விசாரணை முடியும் வரை மேகதாது அணை தொடர்பான எந்த அடுத்தக்கட்ட பணிகளையும் கர்நாடகா அரசு மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும்.

மேகதாது அணை கட்ட மத்திய நீர் ஆணையம் அளித்த ஒப்புதலுக்கும் தடை விதிக்க வேண்டும். மத்திய நீர் ஆணையம் வழங்கிய அனுமதியை உடனே திரும்பப் பெறவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை சுப்ரீம்கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுள்ளது.

கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணசாகர் அணை 49 டி.எம்.சி. கொள்ளவு தண்ணீர் சேமித்து வைக்கும் திறன் கொண்டது. ஆனால் மேகதாது அணையில் 67.16 டி.எம்.சி. கொள்ளளவு தண்ணீரை கர்நாடகா அரசால் தேக்கி வைக்க முடியும்.

இதன் மூலம் ஒரு சொட்டுத் தண்ணீரை கூட தமிழ்நாட்டுக்கு கிடைக்காது. இந்த விபரத்தையும் தமிழக அரசு தனது மனுவில் கூறியுள்ளது. இதற்கு கர்நாடகா என்ன பதில் சொல்லும் என்பது சுப்ரீம்கோர்ட்டு விசாரணையின் போதுதான் தெரியும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top