தமிழ் ஈழம்,கஜாபுயல் ,தேர்தல் கூட்டணி குறித்து திருமாவளவன் பேட்டி

தமிழ் ஈழ விடுதலைக்காக உயிரிழந்த வீரர்களின் நினைவு நாள் இன்று மாவீரர் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. சர்வதேச சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்று தமிழ் ஈழத்தை வென்றெடுப்பதற்கான அறவழிப் போராட்டங்களை மேற்கொள்வதற்கு அனைத்து ஜனநாயக சக்திகளை ஒன்றிணைப்பதற்கு இந்நாளில் உறுதியெடுக்கிறோம்” என திருமாவளவன் தெரிவித்தார்.

கஜா புயல் பாதித்த இடங்களுக்கு மத்திய குழு பார்வையிட்டதை விமர்ச்சனம் செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “மத்திய குழு மக்களின் கருத்தை அறியாமல் சென்றுவிட்டார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மத்திய குழு முழுமையாக பாதிப்புகளைக் கண்டறிய வேண்டும். அனுபவமுள்ள வல்லுநர்கள் குழுவை அமைத்து கிராமம், கிராமமாகச் சென்று பாதிப்புகளை மதிப்பிட வேண்டும். அதனடிப்படையில் இழப்பீடுகள் வழங்க வேண்டும்.என்றார்.

கொத்தமங்கலத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தபோது யதேச்சையாக டிடிவி தினகரனைக் காண நேர்ந்தது. ஆனால், தேர்தல் களத்தில் மதச்சார்பற்ற சக்திகளை ஒண்றிணைக்க விசிக உறுதியாக இருக்கிறது. டிசம்பர் 3-ம் தேதி எழுவர் விடுதலையை வலியுறுத்தி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தை தோழமைக் கட்சிகளுடன் இணைந்து நடத்த மதிமுக அறிவித்திருக்கிறது. அதில் விசிகவும் பங்கேற்கும்.என்றார்

இதையடுத்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு திருமாவளவன் பதிலளித்தார்.
கூட்டணி குறித்து இப்போது பத்திரிகைகள் பேசிக்கொண்டிருக்கின்றன. திமுக கூட்டணியில் எந்த சலசலப்பும் கிடையாது. யார் வேண்டுமானாலும் யாரையும் சந்திக்கலாம். ஆனால், தேர்தல் சமயத்தில் கூட்டணி குறித்த நிலைப்பாட்டில் விசிக உறுதியாக இருக்கிறது.

திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, இடதுசாரிகள், மதிமுக, முஸ்லிம் கட்சிகள் உறவு இணக்கமாக இருக்கிறது. இதில் எந்த பங்கமும் ஏற்படவில்லை. திமுக பொருளாளர் துரைமுருகன் சொன்னது யதார்த்தமானது. இன்னும் சொல்லப்போனால், நான் முன்மொழிந்ததை அவர் வழிமொழிந்திருக்கிறார். திமுகவுடன் நாங்கள் தோழமைக் கட்சியாக இயங்கிக் கொண்டிருக்கிறோம். அவை கூட்டணியாக மாற வேண்டும் என்பது எங்களின் எண்ணம். அதனை திமுக தலைவர் அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும். இதில், எந்தக் குழப்பமும் இல்லை.

தோழமைக் கட்சிகளாக இருக்கின்றோம் என்று சொல்வதால், கூட்டணி உருவாகாது என்று பொருளில்லை. இன்றைக்கு கூட்டணியில் இல்லை என்பதாலேயே மதிமுக, விசிக கட்சிகள் திமுக கூட்டணியில் இடம்பெறாது என்ற வியூகத்திற்கு வர வேண்டிய அவசியம் இல்லை. மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் கூட்டணியாக வலுப்பெறும்.

திட்டமிட்டு சிலர் திமுக அணியை பலவீனப்படுத்த முயற்சிக்கின்றனர். அவர்கள் மனப்பால் குடிக்கிறார்கள். அவர்களின் கனவு நனவாகாது. எண்ணம் ஈடேறாது.என்றார்.

கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க பிரதமர் இன்னும் வரவில்லையே என்ற கேள்விக்கு ‘’பேருந்து விபத்து நடைபெற்றால் உடனடியாக மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவிக்கிறார். இந்தப் புயல் 63 பேரை காவுகொண்டது. தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் மத்திய அரசு தொடர்ந்து வஞ்சிக்கிறது அதிர்ச்சியளிக்கிறது, வேதனையளிக்கிறது. தமிழக பாஜக தலைவர்களும் அவரை அழைத்து வரும் முயற்சியில் இறங்கவில்லை.

ஆனால், பிரதமர் வர வேண்டும் என்பது பொதுமக்கள் எதிர்பார்ப்பு. பிரதமருக்கு நேரம் இல்லை என்று இப்படிப்பட்ட நேரத்தில் சொல்வது பொருத்தமாக இருக்காது’’. என்றார்

எழுவர் விடுதலையை குறித்து ‘’மாநில அரசு மீது தவறு இல்லை. தீர்மானம் நிறைவேற்றி, நிலைப்பாட்டை இருமுறை தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஆளுநர் எந்த முடிவையும் எடுக்காமல் இருக்கிறார். காங்கிரஸ் ஆட்சியில் தான் இப்படி நடக்கும் என அறிந்திருக்கிறோம். ஆனால், பாஜக இப்படி காலதாமதம் செய்வது சந்தேகத்தை எழுப்புகிறது’’ .என்று திருமாவளவன் தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top