‘கஜா’ புயல் பாதிப்பு; முதல்வர் பழனிசாமியை தமிழகம் வந்துள்ள மத்தியக் குழு சந்தித்து ஆலோசனை

தமிழகத்தை தாக்கிய ‘கஜா’ புயல் ஆறு மாவட்டங்களை அச்சுறுத்தியது. நாகை, வேதாரண்யம் அருகே கரையைக் கடந்தது. இதனால் நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட 6 மாவட்டங்கள் 30 ஆண்டுகளில் சந்தித்திராத பேரழிவைச் சந்தித்தன. லட்சக்கணக்கான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன.வாழைகள் நிலைகுலைந்தன

ஆயிரக்கணக்கான குடிசைகள், வீடுகள் அழிந்தன. 63 பேர் உயிரிழந்தனர். அரசின் நிதி உதவியாக ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் அவை சென்று சேரவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. 7 நாட்களாகியும் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு உணவு, குடிநீர், பால் போன்ற அத்தியாவசியத் தேவைகள்கூட போய் சேரவில்லை என்கிற விமர்சனம் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கடந்த வருடம் ஓக்கி புயல் தமிழகத்தையும் கேரளாவையும் தாக்கிய போது அமைதியாக இருந்த பிரதமர் மோடி, ஓக்கி புயலின் வேகம் குஜராத் நோக்கி நகர்கிறது என்ற வானிலை செய்தியை கேட்ட உடன் பதறிபோய் குஜராத் மாநிலத்திற்கு ஜாக்கிரதையாக இருக்கும் படி அறைகூவல் விடுத்தார்.குஜராத் முதல்வரிடம் பேசி தடுப்பு நடவடிக்கை எடுக்க துரிதப்படுத்தினார். மோடி அவர் சார்ந்த மாநில அக்கரையில் அப்படி செய்தது தவறில்லைதான். . ஆனால், அவர் இந்தியாவிற்கே பிரதமர் எல்லா மாநிலங்களுக்கும் அவர்தான் பிரதமர் என்பதை மறந்து விட்டார். ஆகையால்தான் செய்தி நிறுவனங்கள் தொடர்ந்து எழுதிய பிறகு ஒருமாதம் கழித்து தமிழகம் வந்து பாதித்த மக்களுக்கு ஆறுதல் சொன்னார்.

பிரதமர் மோடி வழியை பின்பற்றி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கஜா புயல் தாக்கிய மக்களை சந்திக்க ஆறு நாள் கழித்து சென்றார். இது ஒரு புறம் இருக்க, இதுவரை தன்னிச்சையாக மத்தியில் ஆளும் பாஜக அரசு யாரையும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க அனுப்பவில்லை.

பின்னர் டெல்லியில் பிரதமரை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் ஏற்பட்ட புயல் சேதங்கள் குறித்த அறிக்கையை அளித்தார். அப்போது அவர் தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களைக் கணக்கிட்டு சீரமைப்பு பணிக்காக மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என்றும், முதல்கட்டமாக ரூ. 1500 கோடி ரூபாய் வழங்கவும் கோரிக்கை வைத்தார்.

நேற்று, தமிழக முதல்வர் கேட்டுக்கொண்ட பிறகு மத்திய அரசு ஆறு அதிகாரிகள் கொண்ட குழுவை அனுப்பி இருக்கிறது.

இன்று காலை ,கஜா’ புயல் சேதங்களை பார்வையிட தமிழகம் வந்துள்ள மத்தியக் குழுவினர் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினர்.

சென்னை வந்த இந்தக் குழு முதல்கட்டமாக இன்று (சனிக்கிழமை) காலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தியது. ஆலோசனை சமயத்தில், அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் துறை சார் உயரதிகாரிகள் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

முதல்வருடன் ஆலோசனை நடத்திய பிறகு அவர்கள் திருச்சி செல்கின்றனர். நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களையும் அவர்கள் பார்வையிட உள்ளனர். தமிழக அதிகாரிகளும் அவர்கள் உடன் செல்வர்.

மின்துறை அமைச்சகத்தின் தலைமை பொறியாளர் வந்தனா சிங்கல், ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் மாணிக் சந்திரா பண்டித், மத்திய வேளாண் துறை இயக்குநர் பி.கே.ஸ்ரீவத்ஸ்வா, நிதித்துறை அமைச்சகத்தின் செலவினங்கள் துறையை சேர்ந்த ஆர்.பி.கவுல், மத்திய உள்துறை செயலத்தின் இணை செயலாளர் டேனியல் ரிச்சர்டு, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறையை சேர்ந்த இளவரசன், மத்திய நீர்வளத் துறை இயக்குநர் ஹர்ஷா ஆகியோர் மத்தியக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

மத்தியக் குழுவினர் கணக்கிடும் சேத விவரங்களைப் பொறுத்தே மத்திய அரசு அறிவிக்கும் நிதித்தொகை அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தொகையை முழுமையாக கொடுக்காத மத்திய பாஜக அரசு, இந்த புயலுக்கும் தமிழகத்தை ஏமாற்றும் என்று அரசியல் கட்சிகள் சொல்வதை பாஜக அரசு பொய்யாக்குமா? பொறுத்து இருந்து பார்ப்போம்!


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top