சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவின் ரகசிய பதில் கசிந்த விவகாரம்; உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவின் ரகசிய பதில் கசிந்த விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளது. அத்துடன் நவ.29-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

ஊழல் புகார் காரணமாக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா ஆகியோரை நீக்க மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் அவர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். இதைத் தொடர்ந்து இணை இயக்குநர் எம். நாகேஸ்வர் ராவ் இடைக்கால இயக்குநராகப் பொறுப்பேற்றார்.

தன்னிச்சை அமைப்பான சிபிஐயில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து விளக்கம் அளித்த சிபிஐ, ”சிபிஐ அமைப்பின் இயக்குநர் பதவியில் அலோக் வர்மா தொடர்கிறார். சிறப்பு இயக்குநர் பதவியில் ராகேஷ் அஸ்தானா தொடர்கிறார். மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் அவர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர்” என்று தெரிவித்திருந்தது.

தன்னைக் கட்டாய விடுப்பில் மத்திய அரசு அனுப்பியதை எதிர்த்து இயக்குநர் அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றம் அலோக் வர்மாவின் வழக்கை விசாரித்து வருகிறது. இதுகுறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, நவ. 19-ம் தேதி அலோக் வர்மா தனது பதிலை சீலிட்ட கவரில் அளிக்க வேண்டும் என்றும், விசாரணை நவ.20 அன்று நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தது.

இதனிடையே நேற்று (நவம்பர் 19) அலோக் வர்மா வெளியிட்ட ரகசிய பதில், ஊடகங்களிடையே கசிந்தது. அவரின் பதிலை செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டிருந்தது. இதுகுறித்து தான் அதிர்ச்சி அடைந்துள்ளதாக, அலோக் வர்மா சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞரான நாரிமன் தெரிவித்தார்.

சிபிஐ இயக்குநரின் ரகசிய பதில் ஊடகங்களிடம் கசிந்தது குறித்து கடும் அதிருப்தியைத் தெரிவித்த உச்ச நீதிமன்றம், விசாரணையை நவ.29-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top