‘நெல்’ ஜெயராமன் முழுமையான நலம்பெற வேண்டும்- வைகோ அறிக்கை

தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனையில் புற்றுநோயிக்காக சிகிச்சை பெற்று வரும் நெல் ஜெயராமனை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

இதுகுறித்து மதிமுக-வின் தலைமை அலுவலகமான தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழர்கள் வேளாண்மை செய்துவந்த 174 வகை பாரம்பரிய நெற்பயிரை அழிவிலிருந்து மீட்பதற்காக தன்னை அர்ப்பணித்துப் போராடி வெற்றி கண்டதற்காக ஜெயராமன், ‘நெல்’ ஜெயராமன் என்று பட்டம் சூட்டி பாராட்டினார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.

காவிரி விவசாயிகளைப் பாதுகாக்கவும், தமிழகத்தின் அனைத்துப் பகுதி விவசாயிகளின் நலனைக் காக்கவும் அறப்போராட்டங்களில் பங்கேற்ற போராளி நெல் ஜெயராமன். கடுமையான நோயின் பிடியில் சிக்கித் தவித்தபோதும், அதனைப் பொருட்படுத்தாது அண்மைக் காலம் வரை ஒரு பக்கம் சிகிச்சை எடுத்துக்கொண்டு விவசாயிகளைத் திரட்டி நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டே வந்தார்.

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ‘நெல்’ ஜெயராமன் அவர்களை நான் சந்தித்துப் பேசியபோது, மனிதாபிமானத்தோடு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிற டாக்டர்களை எல்லாம் குறிப்பிட்டு நன்றி கூறினார்.

குறிப்பாக சித்த வைத்தியச் செம்மல் மருத்துவர் சிவராமன், தனது உடல்நலனைப் பாதுகாக்க பல வகையிலும் உதவி செய்தார் என்று கூறினார். அவர் முழுமையான நலம்பெற வேண்டும் என்ற உணர்வோடு அவருக்கு ஆறுதல் கூறினேன்.

என்று வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top