ரிசர்வ் வங்கி – மத்திய அரசு மோதல்; ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுடன் பிரதமர் மோடி ,அருண் ஜெட்லி சந்திப்பு

ரிசர்வ் வங்கி – மத்திய அரசுக்கும் நடக்கும் பனிப்போருக்கிடையே பிரதமர் மோடியை ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல், பிரதமர் மோடியை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது . நவம்பர் 19-ம் தேதி வாரியக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் கொண்டதாக பார்க்கப்படுகிறது

பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதில் இருந்தே ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையே இணக்கமான போக்கு காணப்படவில்லை. ரிசர்வ் வங்கியை நிர்வகிக்க ரிசர்வ் வங்கி ஆளுநர், துணை ஆளுநர்கள் இருந்தபோதிலும், கூடுதலாக ரிசர்வ் வங்கி வாரியக்குழுவை மத்திய அரசு நியமித்தது.

அந்த குழுவின் தலையீடு அதிகமாக இருந்ததால், இருதரப்புக்கும் இடையே மறைமுகமாக இருந்து வந்த உரசல் சமீபத்தில் வெளிச்சமானது. ஒரு தனியார் நிகழ்ச்சியில் பேசிய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் விரால் ஆச்சார்யா மத்தியஅரசை கடுமையாக விமர்சித்தார்.

மத்திய அரசின் நிதிக்கொள்கை தவறாக கடைபிடிக்கப்பட்டதாலும். கார்பரேட் நிறுவனங்களுக்கு அதிக சலுகை கொடுக்கப்பட்டதாலும் மத்திய அரசு நிதி பிரச்சனையில் மாட்டிக்கொண்டது அதிலிருந்து விடுபட ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு சமீபத்தில் 3 கோரிக்கைகளை விடுத்தது. நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தனது கையிருப்பு பணத்தில் பெரும்பகுதியை மத்திய அரசுக்கு மாற்ற வேண்டும் என்பது அதில் ஒரு கோரிக்கை. இதற்கு ரிசர்வ் வங்கி உடன்படவில்லை.

இந்த சூழலில் ஆண்டுதோறும் ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு ஈவுத்தொகை வழங்கும். அந்த வகையில் இந்த ஆண்டு மத்திய அரசுக்கு ஈவுத்தொகையாக ரூ.50 ஆயிரம் கோடி வழங்க இருக்கிறது. ஆனால், ரிசர்வ் வங்கியிடம் உபரிநிதியாக இருக்கும் ரூ.3.50 லட்சம் கோடியை தனது நிதிப்பற்றாக்குறையைச் சரி செய்து கொள்வதற்காக கேட்டு, மத்திய அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது என்று தகவல்கள் வெளியாகின.

இந்த விவகாரத்தால் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித்படேலுக்கும், நிதி அமைச்சகத்துக்கும் இடையே உரசல் ஏற்பட்டதாகவும், வரும் 19-ம் தேதி நடைபெறும் வாரியக் கூட்டத்தில் அவர் ராஜினாமாவை அறிவிக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவித்தன. ஆனால் இதனை நிதியமைச்சகம் திட்டவட்டமாக மறுத்தது.

இந்தநிலையில், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் கடந்த 9-ம் தேதி பிரதமர் மோடியை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்திப்பின்போது, நவம்பர் 19-ம் தேதி நடைபெறவுள்ள வாரியக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ள தகவல்களை பகிர்ந்து கொண்டதாக தெரிகிறது. இதுமட்டுமின்றி தேர்தலை முன்னிறுத்தி மோடி அறிவித்திருக்கும் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு வங்கி சாராத நிதி நிறுவனங்கள் மூலம் கடன் வழங்கும் திட்டம் உள்ளிட்டவை குறித்து பேசியதாகவும், ஆனால் இதற்கு நிதியமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது பற்றியும் உர்ஜித் படேல் பிரதமரிடம் விளக்கியுள்ளார். நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் உடன் இருந்ததாக சொல்லப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top