‘சர்கார்’ திரைப்பட விமர்ச்சனம்; போலியான நம்பிக்கையை தருகிறது

இந்த தேர்தல் முறைதான் இந்தியாவில் நிலவும் லஞ்ச லாவணிகளுக்கெல்லாம் காரணம். இந்த தேர்தல் முறையின் குற்றங்களை பட்டியல் போட்டு படம் எடுத்தால்தான் நாட்டில் உண்மையான புரட்சி வரும், குறைந்தபட்சம் மாற்றமாவது வரும். ஆனால், அப்படி படம் எடுக்கமுடியுமா.? அப்படி நினைத்தாலே கருவருத்துவிடுவார்கள். இந்த நிலையில், கண்டிப்பாக ஓட்டு போடவேண்டும் என்று சொல்கிற தற்கால அரசியலை முன்னிறுத்தியே,ஓட்டு போட்டு புரட்சியை ஏற்படுத்தி விடலாம் என்கிற போலியான நம்பிக்கையை விஜய் மூலம் ‘சர்கார்’ திரைப்படம் இளைஞர்களுக்கு கொடுத்து இருக்கிறது.

கார்ப்பரேட் உலகின் சிம்ம சொப்பனம்மாக வலம் வருபவர் ஜி.எல். சிஇஓ சுந்தர் ராமசாமி (விஜய்). இவரின் புத்திசாலித்தனத்தால் ”கார்ப்பரேட் மான்ஸ்டர்” என இவரை அழைப்பதுண்டு. இந்த ”கார்ப்பரேட் மான்ஸ்டர்” தேர்தலில் வாக்களிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து சென்னை வருகிறார். விஜய்யின்- ”கார்ப்பரேட் மான்ஸ்டரின் வாக்கு இன்னொருவரால் சாதரணமாக கள்ள ஓட்டாகப் போடப்பட்டது தெரிந்ததும் அந்தத் தேர்தல் முடிவுகளை நிறுத்தி வைக்கச் சொல்லி நீதிமன்றம் செல்கிறார். நீதிமன்றம் 49 (பி) பிரிவின் படி விஜய் வாக்களிக்கலாம் என்று தீர்ப்பளித்ததும் நீதிமன்ற தீர்ப்பின்படி தனி வாக்குச்சாவடி அமைக்கப்படுகிறது.. இதனிடையே விஜய்க்கு வழக்கு விவகாரத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பை மேற்கோள் காட்டி தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள் தங்கள் ஓட்டும் கள்ள ஓட்டாகப் போடப்பட்டதால், எங்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்க வேண்டும் என்று 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மனுத்தாக்கல் செய்கின்றனர். இதனை ஏற்ற நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தின் ஆலோசனையுடன் மறுதேர்தல் நடத்த உத்தரவிடுகிறது.

கள்ள ஓட்டு பற்றி பேசும் இந்தப்படத்தின் கதையும் கள்ளத்தனமாக திருடப்பட்டு நீதிமன்றம் வரை சென்று நியாயம் கிடைத்தது ஒரு நகை முரண்தான்.

அகில இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியின் தலைவர் மாசிலாமணியாக பழ.கருப்பையா, மற்றும் ராதாரவி, வரலட்சுமி மூவரும் தங்களது கதாபாத்திரத்தை எந்தக் குறையுமின்றி சிறப்பாக செய்துள்ளனர்.

பழ.கருப்பையாவின் மகளாக வரும் வரலக்ஷ்மி வார்த்தையிலேயே மிரட்டுகிறார். கீர்த்தி சுரேஷ் வந்து போகிறார். சரியாக பயன்படுத்தப்படவில்லை. எதற்கு இருக்கிறார் என்று தெரியாத அளவுக்கு ஒரு கதாபாத்திரம். ஒரு சில காட்சிகளில் வரும் யோகிபாபுவும் பெரிதாக ஜொலிக்கவில்லை.

தற்கால அரசியலின் அநியாயங்களை தட்டிகேட்கும் சமூக ஆர்வலர்களான பியூஷ்மனுஷ், சபரிமாலா, பேராசிரியை சரஸ்வதி போன்றவர்களை சமூகப்போரளியாகவே காண்பித்து இதுபோன்ற கார்பரேட் படங்களை உண்மைத்தன்மைக்கு அருகே வைத்து பார்க்க வாசகனை போலியாக நிர்பந்திக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

ஆனால், ஏ.ஆர்.முருகதாஸால் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் சமூக ஆர்வலர்கள் பியூஷ்மனுஷ், சபரிமாலா, பேராசிரியை சரஸ்வதி போன்றவர்கள் இந்த தேர்தல்முறையை ஒத்துக்கொள்ளாதவர்கள் என்பதுதான் உண்மை.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் சுமார்தான். ஒட்டுமொத்தமாகப் பாடல்கள் கதையோட்டத்துக்கு வேகத்தடையாகவே இருகின்றன என்றும் சில விமர்ச்சனம் உண்டு

டயலாக், டான்ஸ், வசனம் என எல்லா ஏரியாவிலும் விஜய் வழக்கம்போல புகுந்து விளையாடி தனது ரசிகர்களை தக்கவைத்து இருக்கிறார். பிரம்மாண்டம், சண்டைக்காட்சிகள் என அனைத்திற்கும் தேவையான ஒளிப்பதிவினை கிரிஷ் கங்காதரன் சிறப்பாக அளித்திருக்கிறார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top