மயிலாப்பூரில் மே பதினேழு இயக்கத்தின் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்

நேற்று மாலை 6 மணியளவில் மயிலாப்பூரில் மாங்கொல்லை திடலில் தந்தை பெரியாரின் 140 வது பிறந்த நாளை முன்னிட்டு, மே பதினேழு இயக்கத்தின் சார்பில் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பெண்கள், அரசியல் அமைப்புகளின் பிரதிநிதிகள், குழந்தைகள், தமிழ் உணர்வாளர்கள் என ஏராளமானோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மே பதினேழு இயக்க கலைக்குழுவினரின் பறை இசை மற்றும் நடனத்துடன் கூட்டம் துவங்கியது. தமிழர்களின் கலையான சிலம்பாட்டத்தினையும் தோழர்கள் மேடையில் நிகழ்த்தினர். தந்தை பெரியார் குறித்த பாடலை தோழர்கள் பாடினர்.

சிறை மீண்ட மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் அருள்முருகன், லெனாகுமார், பிரவீன்குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

தமிழ்நாடு முசுலீம் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் திரு.ஹைதர் அலி, தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் தலைவர் தோழர் அரங்க குணசேகரன், தமிழக மக்கள் முன்னணியின் வழக்கறிஞர் பாவேந்தன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட தலைவர் தோழர் குமரன், சீர்காழி பொறுப்பாளர் தோழர் பெரியார் செல்வம், தாளாண்மை உழவர் இயக்கத்தின் தோழர் கோ.திருநாவுக்கரசு, தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் தோழர்கள் டைசன் மற்றும் இளமாறன் ராயல் என்ஃபீல்ட் தொழிலாளிகள் என பலரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

தோழர் பிரவீன்குமார் திருமுருகன் காந்தி மீது நடத்தப்பட்ட ஒடுக்குமுறைகள் குறித்தும், மே பதினேழு இயக்கம் ஏன் இந்த கூட்டத்தினை நடத்துகிறது என்றும் பேசினார். தோழர் அருள்முருகன் ஏழு தமிழர் விடுதலை மற்றும் மனுதர்மம் குறித்து பேசினார். தோழர் லெனா குமார் பார்ப்பனியம் மற்றும் இந்துத்துவத்தின் தத்துவம் குறித்து பேசினார்.

இறுதியாக தோழர் திருமுருகன் காந்தி பேசுகையில், தனது கைதிற்கு கண்டனம் தெரிவித்து உறுதுணையாய் நின்ற அனைவருக்கும் ஒவ்வொருவராய் நன்றி தெரிவித்தார். பின்னர் மனுதர்மம் குறித்தும், அது எவ்வாறு இன்று வரை சட்டத்தின் பிரிக்க முடியாத அங்கமாக திகழ்வது குறித்தும் விரிவாக விளக்கிப் பேசினார். ஏழ்வர் விடுதலைக்கு அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் வரும் குளிர்கால கூட்டத்தொடரில், பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள மின்சார சட்டத் திருத்தம் என்பது எப்படி மின்சாரப் பகிர்வினை தனியார்மயமாக்க உள்ளது என்பது குறித்தும் விரிவாகப் பேசினார். இதன் மூலமாக அனைத்து மக்களுக்கும் மின்சாரம் கொடுக்க வேண்டும் என்றும், பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் ஒரே விலை இருக்கக் கூடாது என்றும் அண்ணல் அம்பேத்கர் கொண்டு வந்த மின்சார உரிமை முழுமையாக பறிக்கப்பட உள்ளது என்பதையும் விளக்கினார்.

மேலும் ஆரிய-பார்ப்பனிய எதிர்ப்பு, வைதீக எதிர்ப்பு போன்றவை ஏன் அவசியம் என்றும் விளக்கினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top