11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: ஓபிஎஸ் தரப்பு கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பிலும், டிடிவி தினகரன் அணியினர் சார்பிலும் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களைத் தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

இதற்கு ஓபிஎஸ் தரப்பில் நாளை நடைபெறும் விசாரணையை தள்ளி வைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் உச்ச நீதிமன்றம் கோரிக்கையை நிராகரித்து. நாளை விசாரணை தொடங்கி தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது.

ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் தனியாக இருந்தபோது எடப்பாடி பழனிசாமி முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். இதில் ஓபிஎஸ் அணியைச்சேர்ந்த செம்மலை, நடராஜ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் எதிர்த்து வாக்களித்தனர். பின்னர் இரு அணிகளும் இணைந்தன.

இந்நிலையில் எதிர்த்து வாக்களித்த 11 பேர் மீதும் அதிமுக தரப்பில் நடவடிக்கை எடுக்கவில்லை, கொறடா உத்தரவை மீறி எதிர்த்து வாக்களித்த ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக கொறடா சக்கரபாணி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதே கோரிக்கையுடன் தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்பட 4 பேரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அமர்வில் நடைபெற்ற விசாரணையில் கடந்த ஏப்ரல் மாதம் 27-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அதில் 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பளித்தது. மேலும், சட்டப்பேரவைத் தலைவர் இதைத்தான் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட முடியாது எனக்கூறி ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேரின் தகுதி நீக்க வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

இதை எதிர்த்து திமுக கொறடா சக்ரபாணி மற்றும் டிடிவி ஆதரவு அணியினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கு நாளைக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதற்கு ஓபிஎஸ் தரப்பில் நாளை நடைபெறும் விசாரணையை தள்ளி வைக்கவேண்டும் தாங்கள் விசாரணைக்கு இன்னும் தயார்படுத்தவேண்டியுள்ளது என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் ஓபிஎஸ் தரப்பு கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. நாளை விசாரணை தொடங்கி தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது.

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சட்டப்பேரவைத் தலைவரின் தீர்ப்பு சரிதான் என உயர் நீதிமன்ற 3-வது நீதிபதியும் தீர்ப்பளித்துள்ள நிலையில், கடிதம் மட்டுமே கொடுத்த எங்களுக்கு தகுதி நீக்கம், எதிர்த்து வாக்களித்த ஓபிஎஸ் போன்றவர்கள் மீது நடவடிக்கை இல்லை என பாதிக்கப்பட்டவர்கள் பேட்டி அளித்தனர்.

தற்போது எதிர்த்தரப்பில் முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தவர்கள் மீதே தகுதி நீக்கம் வந்த நிலையில் எதிர்த்து வாக்களித்த ஓபிஎஸ் போன்றவர்கள் மீதும் நடவடிக்கை வேண்டும் என்கிற வாதம் வைக்கப்படும்.

சட்டப்பேரவை தலைவர், கொறடா நடவடிக்கை இல்லை என்று கூறினால் நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது என்று ஓபிஎஸ் தரப்பில் வாதம் வைக்கப்படும். எனவே நாளை நடைபெறும் விசாரணை இரு தரப்பிலும் சூடுபறக்கும் எனத் தெரிகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top