அமித்ஷாவுக்கு கி.வீரமணி கண்டனம்; உச்ச நீதிமன்றம் எப்படி தீர்ப்பு வழங்க வேண்டும் என்று பேசுவதா?

உச்ச நீதிமன்றம் எப்படி தீர்ப்பு வழங்க வேண்டும் என்று பாஜக தலைவர் அமித்ஷா பேசுவது கண்டிக்கத்தக்கது என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கி.வீரமணி இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “பாஜகவின் தலைவர் அமித்ஷா ராஜாவை மிஞ்சிய ‘ராஜ விசுவாசி’. அவரது ஆணவத்திற்கு அளவே இல்லை. அவர் ஏதோ தேர்தலில் மிகப்பெரிய வித்தைக்காரர் என்றெல்லாம் நினைத்து, உள்ளடி வேலைகளையும், கட்சிகளையும், அதிருப்தியாளர்களையும் அடையாளம் கண்டு அரசியல் சந்தையில் அவர்களை விலைக்கு வாங்கிய வித்தகர் என்று கூறப்படும் ஒரு விநோத அரசியல்வாதி.

அவர்தான் பிரதமர் மோடிக்கு மனசாட்சியாம். வெற்றிக்குப் பாதையமைத்து, மகுடத்தை மோடி தலையில் வைத்தவர் என்றெல்லாம் கூறப்படுகிறது. நியாயமான முறைகளைப் பற்றிக் கவலைப்படாமல், முடிவுதான் எனக்குத் தேவை எனும் வேலைத் திட்டத்துடன் பண பலம், ஆட்சி பலம், மிரட்டல், உருட்டல் பலம் இவற்றின் மூலம் தான் நினைத்ததைச் செய்து வருபவர்.

அவர் கேரளாவுக்குச் சென்று அங்கே, அவரது சிந்தனை முத்துகளை அவிழ்த்துக் கொட்டியுள்ளார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எப்படி தங்கள் தீர்ப்பை எழுத வேண்டும் என்று அவர்களுக்கு வகுப்பு எடுப்பதுபோல, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நடைமுறை சாத்தியமான வகையில் எதைச் செயல்படுத்த முடியுமோ அதற்கேற்ப தங்களது தீர்ப்புகளை எழுதிட வேண்டுமென்ற கருத்துப்பட பேசியுள்ளார்.

ஆளும் கட்சியின் தேசியத் தலைவரின் இத்தகு பேச்சு, நாடு எங்கே போகிறது? என்ற கேள்வியையும், கவலையையும் ஏற்படுத்துகிறது. ஜனநாயகம் ஆட்சி செய்யவேண்டிய இடத்தில், பாசிசத்தின் குரல் ஓங்கி முழக்கமாகி வருகிறது.

ஏற்கெனவே பாஜகவின் பிரமுகர் ஒருவர் உச்ச நீதிமன்றம் எங்கள் கையில் இருக்கிறது என்றும்கூடப் பேசியுள்ளார். இதுகுறித்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ள கருத்து மிகவும் முக்கியமானது.

சபரிமலை விவகாரத்தில் தீர்ப்பு கூறிய நீதிமன்றத்தை மிரட்டுவதற்கு நீங்கள் யார்? உங்களது மிரட்டல் நீதிமன்றத்தின் நடைமுறையைப் பாதிக்கும். அதன் விவகாரங்களில் தலையிடும் போக்கு கண்டிக்கத்தக்கது. விரைவில் உச்ச நீதிமன்றம் பாபர் மசூதி தொடர்பான வழக்கை விசாரித்து தீர்ப்பு கூறவுள்ளது. இந்த நிலையில் அமித்ஷாவின் இதுபோன்ற பேச்சு மிகவும் கண்டிக்கத்தக்கது மட்டுமல்லாமல், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாலக்காட்டில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.

தமிழ்நாட்டில் உள்ள பாஜகவைச் சேர்ந்த ஒருவர், எழுத்தில் எழுத முடியாத கொச்சை விமர்சனத்தை உயர் நீதிமன்றம் பற்றிப் பேசி பிறகு வேறு வழியில்லாமல் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார். நீதிமன்றத் தீர்ப்புகளை விமர்சிப்பது வேறு; உள்நோக்கத்தோடு, அரசியல் வேட்கையுடன் கொச்சைப்படுத்துவது என்பது வேறு. இரண்டுக்கும் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வேறுபாடு உண்டு.

பாஜக தலைவர் அமித்ஷா, மாநிலங்களவை உறுப்பினர், அரசியல் சட்டத்தின் மீது பிரமாணம் எடுத்துக்கொண்டு பதவியேற்றவர். அவர் அரசியல் சட்டத்தின் உச்சகட்ட அமைப்பான உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளுக்குத் தீர்ப்பு எழுதவே தெரியவில்லை என்று தலைமை நீதிபதி உள்பட, மூத்த நீதிபதிகள் மற்ற நீதிபதிகள் 5 பேர்களைக் கொண்ட அரசியல் சட்ட அமர்வையே துச்சமாக்கி, அவர் இஷ்டப்படிப் பேசி அவமதித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம் தானே முன்வந்து பாஜகவின் பொறுப்பாளர் ஒருவரின் பொறுப்பற்ற கொச்சைப் பேச்சுக்காக நீதிமன்றம் சார்பில் நடவடிக்கை எடுத்ததுபோல, உச்ச நீதிமன்றம் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்க வேண்டாமா?

மிக முக்கியமான மனித உரிமைப் பிரச்சினையில், அதுவும் அவர் சார்ந்த ஆர்எஸ்எஸ்காரர்களே சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் எல்லா வயது பெண்களையும் கும்பிட அனுமதிக்கவேண்டும் என்று வழக்குத் தொடுத்துவிட்டு, பிறகு தலைகீழ் பல்டி அடித்து, அதை கேரள கம்யூனிஸ்ட் அரசினைக் கவிழ்ப்பதற்கு ஒரு ஆயுதமாக்கிக் கொண்டு அரசியல் கெடுபிடி வித்தை காட்டுகின்றனர்.

கேரள மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர், அமித்ஷாவுக்கு சவால்விட்டு முதுகெலும்பு உள்ளவர்கள் நாங்கள் என்று காட்டும் வகையில், அமித்ஷா, உங்களுக்குத் தைரியமிருந்தால் எங்கள் கேரள ஆட்சியைக் கலைத்துப் பாருங்கள் என்று பேசியுள்ளதைப் பாராட்டுகிறோம்.

தமிழக அரசு இப்படி பறிபோகும் பல மாநில உரிமைகளை நினைவூட்டிக் கேட்டுப் பெறக்கூடத் துணிவின்றி இருப்பது மிகவும் வேதனைக்குரியது. மாநில உரிமைகள் நாளும் பறிபோகின்றன.

6 ஆயிரம் கீழமை நீதிபதிகளை மத்திய அரசே தனித்தேர்வு நடத்தி நியமனம் செய்வோம் என்று கூறியதற்கு, இதுவரை எந்த எதிர்ப்பையும் தமிழக அரசு தெரிவிக்கவில்லை. டிஎன்பிஎஸ்சி அமைப்பும், சென்னை உயர் நீதிமன்றமும் கலந்து நமது தமிழ்நாட்டில் கீழமை நீதிபதிகளை நியமிப்பதற்குப் பதில் அரசியல் சட்ட விதிகளுக்கு முற்றும் புறம்பாக நடந்துகொள்வதற்கு உடனடியாக மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டாமா?

அதுபோல 2 ஆண்டுகளுக்கு மேல் நீட் தேர்வுக்கு விதிவிலக்கு கோரிய இரண்டு மசோதாக்களின் கதி என்னாயிற்று என்றே இதுவுரை தெரியாத வேதனையான நிலை உள்ளது.

அமித்ஷாக்களின் ஆட்டம் இன்னும் 6 மாதங்கள்தான். மக்கள் பாடம் கற்பிப்பர்.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி போல மற்ற தேசிய, மாநிலக் கட்சித் தலைவர்களும் அமித்ஷாவின் இந்த வரம்பு மீறிய ஆணவ நீதிமன்ற அவமதிப்புப் பேச்சினைக் கண்டிக்க முன்வந்தால்தான் ஜனநாயகம் பிழைக்கும்” என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top