எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு; புகாரை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்து உள்ளது.

தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் பல்வேறு சாலைப்பணிகள், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர்களுக்கும், அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் ஒதுக்கியதாகவும், இந்த டெண்டர்கள் மூலம் ரூ.4,833 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்று உள்ளதாகவும் சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. வழக்கு தொடர்ந்தது. எடப்பாடி பழனிசாமி மீதான இந்த ஊழலை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் புகாரை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என கடந்த 12-ந் தேதி உத்தரவிட்டார்.

சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தங்களை கேட்காமல் உத்தரவு எதுவும் பிறப்பிக்க கூடாது என தி.மு.க. சார்பில் கேவியட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் ஒரு மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ‘இந்த வழக்கில் தி.மு.க.வின் ‘லெட்டர் பேடில்’ புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே இது முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை என்பது நிரூபணம் ஆகியுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்கனவே தாக்கல் செய்த ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை அடங்கிய ‘சீல்’ வைக்கப்பட்ட உறையை ஐகோர்ட்டு திறந்து கூட பார்க்கவில்லை. முக்கியமான இந்த அறிக்கையை பார்க்காமல் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றியது முற்றிலும் தவறானதாகும். எனவே எந்த விதமான ஆதாரமும், முகாந்திரமும் இன்றி இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரணைக்கு வந்தது .

மனுவை விசாரித்த நீதிபதிகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்து உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top