இலங்கை நாடாளுமன்றம் முடக்கம்;சபாநாயகர் அறிவுறுத்தலை மீறி பிரதமராக பதவியேற்றார் ராஜபக்சே!

இன்று காலை ராஜபக்சே சபாநாயகரின் அறிவுறுத்தலையும் மீறி இலங்கை அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக இலங்கை பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.

இலங்கையில் புதிதாக நியமிக்கப்பட்ட ராஜபக்சேயை பிரதமராக ஏற்க நாடாளுமன்ற சபாநாயகர் மறுத்துவிட்டார். இதனால் அங்கு உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டு இருப்பதால், கொழும்பு நகரில் ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளது.

இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக பதவி வகித்து வந்த ரனில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக அதிகார போட்டி நிலவி வந்தது.

இந்த மோதல் தீவிரமடைந்த நிலையில், அதிபர் சிறிசேனா, பிரதமர் பதவியில் இருந்து ரனில் விக்ரமசிங்கேயை கடந்த வெள்ளிக்கிழமை இரவு அதிரடியாக நீக்கினார். உடனடியாக முன்னாள் அதிபர் ராஜபக்சேயை பிரதமராக நியமித்து, பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து ரனில் விக்ரமசிங்கேவுக்கு அளித்து வந்த பாதுகாப்பும் ரத்து செய்யப்பட்டது. பிரதமர் இல்லத்தில் இருந்து உடனடியாக வெளியேறும்படி அவருக்கு உத்தரவிடப்பட்டது.

அதிபரின் முடிவு சட்ட விரோதமானது என்று கண்டனம் தெரிவித்த ரனில் விக்ரமசிங்கே, தான் தொடர்ந்து பிரதமராக நீடிப்பதாக அறிவித்தார்.

மேலும், நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க தனக்கு உத்தரவிடவேண்டும் என்று சபாநாயகர் கரு ஜெயசூர்யாவுக்கு அவர் கடிதம் எழுதினார். இதனால் பலப்பரீட்சையை தவிர்க்கும் வகையில் நாடாளுமன்றத்தை வருகிற 16-ந் தேதி வரை முடக்கிவைப்பதாக அதிபர் சிறிசேனா அறிவித்தார்.

ராஜபக்சே தலைமையிலான புதிய மந்திரிசபை இன்று (திங்கட்கிழமை) பதவி ஏற்றுக்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இலங்கையின் அரசியல் சட்டப்படி, பிரதமர் பதவி வகிக் கும் ஒருவர் மரணம் அடையும்போதோ அல்லது அவர் பதவி விலகினாலோ மற்றும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோற்கடிக்கப்பட்டாலோ தான் அதிபரால் புதிய பிரதமரை நியமிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இலங்கை அரசியலில் நேற்று மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது. அதிபர் சிறிசேனா, ராஜபக்சேயை பிரதமராக நியமித்து பிறப்பித்த உத்தரவை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா ஏற்க மறுத்துவிட்டார்.

இது தொடர்பாக அதிபர் சிறிசேனாவுக்கு அவர் ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- நாடாளுமன்றத்தை வருகிற 16-ந் தேதி வரை முடக்கி வைப்பதாக நீங்கள் அறிவித்து இருப்பது நாட்டில் தீவிரமான மற்றும் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும்.

அரசின் தலைவராக ரனில் விக்ரமசிங்கேயை மீண்டும் நியமிப்பதற்கு நீங்கள் முன்னுரிமை அளிக்கவேண்டும். ஏனென்றால் அவர் நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கவும், நல்ல நிர்வாகத்திற்காகவும் தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

அவருக்கு எதிராக இன்னொருவர் தனக்கு உள்ள பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ரனில் விக்ரமசிங்கேயின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். ரனில் விக்ரமசிங்கேவுக்கு அளித்து வந்த பாதுகாப்பை விலக்கிக்கொண்டதும் ஏற்கக்கூடியது அல்ல. பிரதமருக்கான சலுகைகள் அவருக்கு தொடர்ந்து அளிக்கப்பட வேண்டும். அதற்கான அத்தனை உரிமைகளும் அவருக்கு உண்டு.

மேலும் நாடாளுமன்றத்தை முடக்கி வைப்பது என்றால் சபாநாயகரான என்னுடன் நீங்கள் கலந்து ஆலோசித்து இருக்க வேண்டும். இதுபோன்ற முடக்கம் நாட்டில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும்.

எனவே, உங்களது முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள். நாடாளுமன்றத்தை முடக்கும் விவகாரத்தை பொறுத்தவரை, சபாநாயகருடன் கலந்து ஆலோசனை நடத்திய பிறகே அதுதொடர்பான முடிவுகளை நீங்கள் எடுக்க முடியும் என்பதை இந்த நேரத்தில் உங்களது கவனத்துக்கு கொண்டு வருகிறேன். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் ரனில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சிக்கு 106 எம்.பி.க்களும், ராஜபக்சே மற்றும் அவருடைய ஆதரவு கட்சிகளுக்கு 95 எம்.பி.க்களும் உள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 16 உறுப்பினர்களும், மார்க் சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுனாவுக்கு 6 எம்.பி.க்களும் 2 சிறிய கட்சிகளுக்கு தலா ஒரு எம்.பி.யும் உள்ளனர்.

இதற்கிடையே, இலங்கை அரசியலில் உச்ச கட்ட நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கை பிரதமராக பதவியேற்ற ராஜபக்சே இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். பிரதமர் அலுவலகம் சென்ற ராஜபக்சே தனது அலுவல் பணிகளை துவங்கினார். இலங்கையின் 22-வது பிரதமராக ராஜபக்சே பொறுப்பேற்றுள்ளார். ராஜபக்சே தலைமையிலான புதிய மந்திரிசபை சற்று நேரத்தில் பதவியேற்றுக்கொள்ளும் இன்று இலங்கையில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ராஜபக்சே, தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்களை தனக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு, ராஜபக்சே பிரதமராக நியமிக்கப்பட்டு இருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இதுபற்றி அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், “இலங்கையில் கடந்த காலத்தில் மனித உரிமைகள் மீறப்பட்ட நிலையில் ராஜபக்சே பிரதமராக நியமிக்கப்பட்டு இருப்பதில் எந்த நியாயமும் இல்லை. இதனால் கடந்த காலத்தில் நிகழ்ந்த மனித உரிமை அத்துமீறல்கள் மீண்டும் அரங்கேறும் நிலை உருவாகி உள்ளது. விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு எதிரான இறுதிக்கட்ட போரில் ராஜபக்சேயின் ராணுவம் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தியது. சிறைக்கைதிகளை கொன்றும் குவித்தது” என்று குறிப்பிட்டு உள்ளது.

அதிபர் சிறிசேனா-ரனில் விக்ரமசிங்கே ஆகியோருக்கு இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் தற்போது, சிறிசேனாவுக்கு எதிராக சபாநாயகர் போர்க்கொடி உயர்த்தி இருப்பது இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனால் கொழும்பு நகரில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதையடுத்து கொழும்பு நகரிலும், நாட்டின் பிற முக்கிய நகரங்களிலும் ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top