புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் அடவாடித்தனம்; கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்

புதுவை சட்டக்கல்லூரியில் கவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து மாணவர்கள் கேட்டை பூட்டிய சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

புதுவை கவர்னர் கிரண்பேடி தொழிற்சாலைகள், கல்வி நிலையங்களில் மழைநீர் சேகரிப்பு வசதி செய்யப்பட்டுள்ளதா? என்று தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.

அதன்படி பல்வேறு தொழிற்சாலைகள் பல்கலைக்கழகம், அரசு கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் ஆகியவற்றில் ஆய்வு செய்துள்ளார்.

காலாப்பட்டில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் ஆய்வு செய்வதற்காக கிரண் பேடி இன்று வருவதாக அறிவித்து இருந்தார்.

12.50 மணிக்கு அவர் கல்லூரிக்கு வருவதாக இருந்தது. ஆனால் முன் கூட்டியே 11.45 மணிக்கே சட்டக்கல்லூரிக்கு வந்தார்.

முதல்வர் அறைக்கு சென்ற அவர், முதல்வர் மற்றும் பேராசிரியருடன் மழைநீர் சேகரிப்பு பற்றி பேசினார்.

பின்னர் ஆய்வு செய்வதற்கு புறப்பட்டார். அப்போது ஏராளமான மாணவர்கள் ஒன்று திரண்டு கவர்னரை சந்திக்க வந்தனர்.

அவர்கள் கல்லூரி விடுதியிலும், கல்லூரியிலும் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி அவற்றை செய்து தரும்படி கவர்னரிடம் கேட்டுக்கொண்டனர்.

அதற்கு கவர்னர் நான் மழைநீர் சேகரிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய வந்துள்ளேன் என்று கூறினார். அதற்கு மாணவர்கள் எங்களுடைய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தினார்கள்.

அதற்கு கவர்னர் உரிய பதில் அளிக்கவில்லை. இதனால் மாணவர்கள் கோபம் அடைந்தனர்.

கவர்னரிடம் அவர்கள் நீங்கள் எல்லா வி‌ஷயங்களிலும் தலையிடுகிறீர்கள். எங்கள் கோரிக்கையை மட்டும் நிறைவேற்ற ஏன் மறுக்கிறீர்கள் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கிருந்த போலீசார் மாணவர்களை கவர்னர் அருகே நெருங்க விடாமல் பார்த்து கொண்டனர்.

மாணவர்கள் வாக்குவாதம் செய்ததால் கவர்னர் அங்கிருந்து புறப்பட தயார் ஆனார். உடனே மாணவர்கள் கேட் அருகே மோட்டார் சைக்கிள்களை வரிசையாக நிறுத்தி கவர்னர் அங்கிருந்து சென்று விடாமல் தடுக்கும் வகையில் செய்தனர்.

மேலும் சில மாணவர்கள் மெயின் கேட்டை இழுத்து மூடினார்கள். இதனால் கவர்னரால் கல்லூரியை விட்டு வெளியே வர முடியவில்லை.

இதை தொடர்ந்து கூடுதல் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனாலும் மாணவர்கள் அவரை வெளியே செல்ல விடாமல் தடுப்பதிலேயே குறியாக இருந்தனர்.

எனவே, மாணவர்களை அப்புறப்படுத்த போலீசார் முயற்சித்தனர். அப்போது போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர் ஒரு வழியாக மாணவர்கள் சமாதானம் அடைந்தனர். அங்கிருந்த மோட்டார் சைக்கிள்களை போலீசார் அப்புறப்படுத்தி கவர்னர் கார் செல்வதற்கு வழி ஏற்படுத்தினார்கள்.

பின்னர் மெயின் கேட்டின் ஒரு பகுதியை மட்டும் போலீசார் வலுக்கட்டாயமாக திறந்தனர். அதன் வழியாக கார் வெளியே சென்றது.

இந்த சம்பவம் காரணமாக சட்டக்கல்லூரியில் அரை மணி நேரத்துக்கும் மேலாக கடும் பரபரப்பு ஏற்பட்டது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top